ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு: 7 ஆண்டுகளில் 1146 கோயில் சிலைகளை மீட்டு சாதனை

தமிழகத்தில் திருடப்பட்ட கோயில் சிலைகளில் 1146 சிலைகளை 7 ஆண்டுகளில் மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் வெள்ளிக்கிழமை
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. ஏ.ஜி.பொன் மாணிக்கவேல்
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. ஏ.ஜி.பொன் மாணிக்கவேல்


தமிழகத்தில் திருடப்பட்ட கோயில் சிலைகளில் 1146 சிலைகளை 7 ஆண்டுகளில் மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் வெள்ளிக்கிழமை ஓய்வுபெறுகிறார்.
தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் தமிழக ரயில்வே காவல் துறையின் ஐ.ஜி.யான ஏ.ஜி. பொன்மாணிக்கவேல் வெள்ளிக்கிழமையுடன் (நவம்பர் 30) பணி ஓய்வுபெறுகிறார். கடந்த 1989ஆம் ஆண்டு டி.எஸ்.பி.யாக தமிழக காவல் துறையில் சேர்ந்த பொன் மாணிக்கவேல் ராமேசுவரத்தில் பணியைத் தொடங்கினார். தமிழக காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள பொன் மாணிக்கவேல், தான் பணிபுரிந்த இடங்களில் குற்ற வழக்குகளின் விசாரணையில் தனி முத்திரை பதித்து வந்தார். 
இதையடுத்து அவர், கடந்த 2012ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.
அந்த நாள் முதல் இது வரை தமிழக கோயில்களில் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 201 உலோக சிலைகள், 653 கற்சிலைகள், 80 மரச்சிலைகள், 212 ஓவியங்கள் உள்பட 1,146 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 17 சிலைகளை சர்வதேச போலீஸார் மூலம் பொன் மாணிக்கவேல் மீட்டு, தமிழகத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
கடந்த 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 2011ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகளில் 175 கற்சிலைகள்,135 உலோகச் சிலைகள், 3 மரச்சிலைகளை மட்டுமே மீட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையை மாற்றி, 7 ஆண்டுகளில் 1,146 சிலைகளை மீட்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கும் தமிழக காவல் துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார் பொன் மாணிக்கவேல். சிலை கடத்தல் பிரிவில் உள்ள 29 போலீஸாரின் துணையுடன் கடந்த 7 ஆண்டுகளில் புதிதாக 45 வழக்குகளைப் பதிவு செய்து, 47 குற்றவாளிகளை பொன் மாணிக்கவேல் கைது செய்துள்ளார்.
ராஜராஜன் சோழன் சிலை: தஞ்சாவூர் பெரிய கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ராஜராஜன் சோழன் சிலை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சிலைகளையும் பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் மீட்டது தமிழக மக்களிடம் மிகுந்த பாராட்டையும், தமிழக காவல் துறைக்குப் பெருமையையும் பெற்றுத் தந்தது. மேலும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தனியார் அருங்காட்சியகங்களில் இருக்கும் 8 சிலைகளை மீட்பதற்குரிய நடவடிக்கைளை பொன் மாணிக்கவேல் மேற்கொண்டார். 
கலைப் பொருள்களை விற்பனை செய்வதாகக் கூறி, சிலை கடத்தலில் ஈடுபட்டு வந்த தீனதயாளன் உள்ளிட்ட சிலரை கடந்த 2016ஆம் ஆண்டு துணிவுடன் பொன்மாணிக்கவேல் கைது செய்தது தமிழகத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதன் பின்னர், அருங்காட்சியகம் வைத்திருப்பதாகவும், கலைப் பொருள்களை விற்பதாகவும் கூறி அரை நூற்றாண்டுகளாக கோயில் சிலைகளைத் திருடி விற்ற கும்பலை அடுத்தடுத்து கைது செய்தார். மேலும் சர்வதேச சிலை கடத்தல் கும்பலோடு, இங்குள்ள திருட்டுக் கும்பல் வைத்திருந்த ரகசிய தொடர்பை உடைத்தெறிந்து, முற்றிலுமாக அந்தக் கும்பலை பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
இன்று ஓய்வு: கோயில்களில் சிலைகள் திருடப்படுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்து அறநிலையத் துறைக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் பொன் மாணிக்கவேல் வழங்கியுள்ளார்.
வழக்கு விசாரணையில் மட்டுமன்றி, இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சிலை பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை பயன்படுத்துவதிலும், சட்ட நுணுக்கங்களை கையாளுவதிலும் பொன் மாணிக்கவேல் சிறந்து விளங்கினார். அவரது திறமையை இன்றைய தலைமுறை காவல் துறை அதிகாரிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 1980ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை திருடப்பட்ட கோயில் சிலைகளை மீட்டுக் கொண்டு வந்ததில் பொன் மாணிக்கவேலின் பணி மகத்தான து. மேலும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 30) ஓய்வுபெறும் பொன் மாணிக்கவேல் விட்டுச் செல்லும் பணியை, இனியொருவர் செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல என்றும் அவர்கள் 
தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com