தடுப்பணையைவிட கதவணை தரும் பலன்கள் அதிகம்!

பருவ காலங்களில் கிடைக்கும் மழை நீரை சேமித்து வைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்
தடுப்பணையைவிட கதவணை தரும் பலன்கள் அதிகம்!

திருச்சி: பருவ காலங்களில் கிடைக்கும் மழை நீரை சேமித்து வைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித் துறையினரால் திட்டமிடப்பட்ட கொள்ளிடத்தில் 7 இடங்களில் கதவணைகள் கட்டும் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையால் அணைகள் நிரம்பியதால் அவற்றின் உபரிநீர் தமிழகத்துக்குத் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, ஜூலை 19 ஆம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் கர்நாடகத்தில் மீண்டும் பெய்த பலத்த மழையால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு வரும் நீர்வரத்தின் அளவு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கன அடி வரை உபரியாக வந்த நீர் அப்படியே திறந்துவிடப்பட்டது.

இதைத் தவிர, அமராவதி, பவானி ஆறுகளிலிருந்து வரும் உபரிநீரும் அதிகரித்ததால் மாயனூரிலுள்ள கதவணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தது. மாயனூரிலிருந்து திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வரும் தண்ணீரில் காவிரியில் சுமார் 60,000 கன அடி வரையிலும், கொள்ளிடத்தில் 1.50 லட்சம் கன அடிக்கு மேலும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் இரு ஆறுகளின் கரையோரப் பகுதிகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நாமக்கல், ஈரோடு மாவட்ட காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கால் பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக முதல்வர், பருவ காலங்களில் கிடைக்கும் மழை நீரைச் சேமித்து வைக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, கொள்ளிடத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே பொதுப்பணித் துறையின் மூத்த பொறியாளர்கள் சில திட்டமிடல்களை மேற்கொண்டனர். அதனடிப்படையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 7 இடங்களில் கதவணைகள் கட்டும் திட்டத்துக்கான முன்வரைவையும், எத்தனை கி.மீ. தொலைவுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த கதவணைகளைக் கட்ட வேண்டும் என்றும் கருத்துரு செய்திருக்கின்றனர்.

எந்தெந்த இடங்கள் ?

கொள்ளிடம் ஆற்றில் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம், லால்குடி அருகே கூகூர், அரியலூர் மாவட்டத்தில் திருமழப்பாடி, ஏலாக்குறிச்சி, காமரசவல்லி, கோடாலிக்கருப்பூர் மற்றும் அணைக்கரைக்கு மேல்பகுதி என 7 இடங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இதுபோல, கீழணைக்கு கீழ் பகுதியில் 3 இடங்களிலும் கதவணைகள் கட்டும் திட்டத்துக்கான வரைவையும் தந்திருக்கின்றனர்.

ஒவ்வொரு அணையையும் 25 அடி உயரத்துக்கு (7.50 மீட்டர்) கட்டி தண்ணீர் தேக்குவதன் மூலம் இருபுறமும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். ஒவ்வொரு கதவணையும் 15.2 கி.மீ. தொலைவுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்படுவதால் முழுமையாகத் தண்ணீரைச் சேமித்து வைக்கவும் முடியும். கதவணைகளில் 5 கி.மீ. தொலைவுக்கு தடுப்புச்சுவர் அமைக்கும் திட்டத்தையும் திட்ட வரைவில் தயாரித்திருந்ததால், ஆற்றின் கரை அரிப்பையும் தடுக்க முடியும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணைகள் கட்டும் திட்டத்தை மேற்கொள்ள நில ஆர்ஜிதம் செய்யும் பணிகளும் இருக்காது என்றும், ஒவ்வொரு பணிக்கான வரைவுத் திட்டங்களையும் பொதுப்பணித் துறையில் பணியாற்றிய காலத்தில் பல மூத்த பொறியாளர்கள் அளித்துச் சென்றிருக்கின்றனர்.

கொள்ளிடத்தில் வெள்ளம்

கடந்த 2005-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, காவிரியைக் காட்டிலும், கொள்ளிடத்தில்தான் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. 

3 லட்சம் கன அடி வரை கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் அந்த  அளவையும் தாங்கிக் கொண்டது கொள்ளிடம். ஆண்டுக்கு 60 டி.எம்.சி. வரை கடலில் தண்ணீர் கடலில் கலப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கடலில் தண்ணீர் கலப்பது அவசியம் என்றாலும், வெள்ளக் காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து பயன்படுத்திக் கொள்வதற்கான  சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்து, தேவையான இடங்களில் கதவணைகள் கட்டும் திட்டத்தை மேற்கொள்வதே சிறந்த வழி என்கின்றனர் விவசாயிகள்.

நீர்வழிச்சாலைகளைக் கண்டறிவது அவசியம்

கதவணைகள், தடுப்பணைகள் கட்டுவது என்பது அரசுக்கு செலவைத்தான் ஏற்படுத்தும். பெரும் வெள்ளத்தால் தடுப்பணைகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டுவிடும். 

எனவே ஒவ்வொரு ஏரி, கால்வாய்களுக்கான நீர்வழிச்சாலைத் திட்டத்தை கண்டறிந்து, அதற்கான வழிகளை உருவாக்குவது அவசியம். தடுப்பணைகள் கட்டுவதால் நிலத்தடி நீர்மட்டமே உயருமே தவிர வேறு எந்தப் பலனும் இல்லை என்கிறார் பாரதிய கிசான் சங்க மாநிலச் செய்தித் தொடர்பாளர் 


இனிமேலாவது அக்கறை கொள்ள வேண்டும் 

2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2013-ல் கொள்ளிடத்தில் அதிக அளவில் நீர் சென்றாலும், அதையும் தாண்டி தற்போது நீர் சென்றிருக்கிறது. 2005-ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டம் பெரிய அளவில் வெள்ளத்தால் பாதிப்படையவில்லை. வாய்க்கால்கள், ஏரிகள் நிரம்பினாலும், நீர்வழித் தடங்களின் ஆக்கிரமிப்பால் ஏரிகள் பலவற்றுக்கு நீர் முழுமையாகச் சென்றடையாத நிலைதான் காணப்பட்டது. எனவே கடலில் சென்று கலக்கும் நீரை சேமித்து வைக்க எந்த இடத்திலும் அணைகள் கட்டும் திட்டம் இல்லை. இதுவரை இல்லையென்றாலும் இனிமேலாவது இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தண்ணீரை சேமித்து வைக்கும்போது அது அனைத்துத் தரப்பினருக்கும் பலன் தரும் என்கிறார் தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பொ. அய்யாக்கண்ணு.


அரசுதான் முடிவு செய்ய வேண்டும் விவசாயிகளின் கோரிக்கைகளை 


அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். திட்டங்கள் குறித்து தேவையான கருத்துருக்கள் அரசு சார்பில் கோரப்படும்போது அதை அனுப்பி வைப்போம் என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com