பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை: தமிழக அமைச்சரவை முடிவு  

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை: தமிழக அமைச்சரவை முடிவு  

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலவர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஞாயிறு மலை 4 மணி அளவில் கூடியது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கூட்டமானது மாலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது.

இந்த கூட்டத்திற்குப் பிறகு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்  குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட விஷயங்களாவன:

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ்,  ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய ஏழு பேரும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். அவர்களில் தன்னை முன்விடுதலை செய்யக் கோரி, பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவில், குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 161-ன் படி, மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களது விடுதலை குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் அறிவு தவிர இதர 6 பேரும், தங்களை முன்விடுதலை செய்யக் கோரி மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதன்படி இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

இரண்டாவதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வரான சி.என். அண்ணாதுரை அவர்களுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரன் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது பெயரை சென்னையில் அமைந்துள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சூட்டுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நான்காவதாக ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா  அவர்களுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com