60 லட்சம் பேருக்கு ரூ.2,000 உதவித் தொகை - துணை முதல்வர் ஓபிஎஸ்  உறுதி

தமிழகத்தில் 60 லட்சம் பேருக்கு ரூ.2,000 உதவித் தொகை உறுதியாக வழங்கப்படுமென துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
60 லட்சம் பேருக்கு ரூ.2,000 உதவித் தொகை - துணை முதல்வர் ஓபிஎஸ்  உறுதி
Updated on
1 min read


வெள்ளக்கோவில்: தமிழகத்தில் 60 லட்சம் பேருக்கு ரூ.2,000 உதவித் தொகை உறுதியாக வழங்கப்படுமென துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

திருப்பூர் வெள்ளக்கோவிலில் ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு ஜி.மணிமாறனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று (புதன்கிழமை) பேசினார். அப்போது, 

"மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு மக்களுக்கான நல்ல திட்டங்களை நிறைவேற்றவில்லை. சேது சமுத்திரத் திட்டம் உருப்படியில்லாத, தோல்வி அடைந்த திட்டம். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை கெஜட்டில் வெளியிடவில்லை. இதை உச்சநீதிமன்றம் வரை சென்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்த வைத்தார்.

தற்போது மாநில அரசு அறிவித்த ஏழைத் தொழிலாளர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு ரூ.2,000 உதவி வழங்கும் திட்டத்துக்கு திமுக உயர்நீதிமன்றம் சென்று தடை பெற்றுள்ளது. 60 லட்சம் பேர் பயன்பெறும் இத்திட்டம் உறுதியாகச் செயல்படுத்தப்படும். 2023 ஆம் ஆண்டுக்குள் குடிசைகளற்ற மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும்.

நெல் உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் தொடர்ந்து நான்காண்டுகளாக முதலிடம் பெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு தடையை உடைக்க பிரதமர் மோடி உதவினார். கொப்பரை விலை கிலோ ரூ.52 இல் இருந்து ரூ.95 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும். மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்கி 3 ஆயிரம் மெகாவாட் உபரி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

முதல்வராகும் ஆசையில் ஜோசியர் ஆலோசனைப்படி மு.க.ஸ்டாலின் விதவிதமான சட்டை, பேண்ட் போட்டு, நடைப்பயிற்சி, சைக்கிளில் சென்று, சாலையோரக் கடையில் டீ சாப்பிட்டு பல வித்தைகள் செய்து வருகிறார். நாங்கள் டீக்கடையே நடத்துபவர்கள். பிரியாணி, புரோட்டா சாப்பிட்டு விட்டு திமுகவினர் கடைக்காரர்களை அடிக்கிறார்கள்.

ஸ்டாலின் அதிமுகவை அழிக்க நினைக்கிறார். ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவை அசைக்க முடியாது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்ட கட்சி (அதிமுக) மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
தங்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என மக்களுக்குத் தெரியும். மக்கள் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.

பிரச்சாரத்தில் ஈரோடு மக்களவைத் தொகுதி வேட்பாளர் வெங்கு ஜி.மணிமாறன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com