
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் மற்றும் அரியர்ஸ் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய 130 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என்றும், அவர்களின் பட்டங்களையும் ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017, 2018 ஆம் கல்வி ஆண்டுகளில் நடைபெற்ற ‘செமஸ்டர் மற்றும் அரியர்ஸ்’ தேர்வுகளில் விடைத்தாள்களை மாற்றி வைத்து, முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். விசாரணையில், பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 7 மண்டலங்களில் தேர்வு காலங்களில் அலுவலக உதவியாளர்களாக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட 37 ஊழியர்கள் துணையுடன் இந்த முறைகேடு நடந்தது தெரிய வந்தது. மேலும் இதற்கு உடந்தையாக தேர்வு ஒருங்கிணைப்பாளராக இருந்த தனியார் கல்லூரி விரிவுரையாளர் சுரேஷ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து முறைகேட்டில் தொடர்புடைய 37 தற்காலிக பணியாளர்களையும் பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்த அண்ணா பல்கலைக்கழகம், தனியார் கல்லூரி விரிவுரையாளர் சுரேஷ் எந்த கல்லூரியிலும் பணி வழங்க கூடாது என கடந்த மாதம் ஆணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், முறைகேட்டில் தொடர்புடைய 130 மாணவர்களுக்கும் பட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், அவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என்றும், சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நிபந்தனை விதித்து அறிவித்துள்ளது.
இந்த முறைகேட்டில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் அரியர்ஸ் வைத்துள்ள பழைய மாணவர்கள் என்பதும், அவர்களிடம் ரூ.15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக உதவியாளர்கள் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.