ஓட்டுக்கு பணம் வாங்கினால் என்ன தப்பு? எழும்பும் எதிர்க்குரல்!

வாக்குக்கு பணம் பெறுவது குற்றம், எங்கள் வாக்கு விற்பனைக்கல்ல என்று பல்வேறு வகைகளில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
ஓட்டுக்கு பணம் வாங்கினால் என்ன தப்பு? எழும்பும் எதிர்க்குரல்!


வாக்குக்கு பணம் பெறுவது குற்றம், எங்கள் வாக்கு விற்பனைக்கல்ல என்று பல்வேறு வகைகளில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

ஆனாலும், வாக்குக்கு பணம் பெறுவதில் என்ன தவறு இருக்கிறது என்பதே பெரும்பாலானவர்களின் கேள்வியாக உள்ளது.

இது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? வாருங்கள் நேரில் சென்று கேட்கலாம்.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், என்னிடம் எனது மனைவி கேட்கிறார், தமிழக அரசும் மத்திய அரசும், வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று வாக்காளர்களிடம் சொல்கிறார்கள். ஆனால், ஒரு வேலை விஷயமாக அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் அங்கே லஞ்சம் வாங்காமல் வேலை நடக்கிறதா? ஒரு கையெழுத்துக்கு எவ்வளவு பணம் கேட்கிறார்கள். பிறகு நாங்கள் மட்டும் வாக்குக்கு பணம் வாங்கக் கூடாது என்று கூறுவது ஏன்? எனக் கேட்கிறார் என்று ஆதங்கத்தோடு கூறுகிறார்.

தமிழகத்தில் சமீபத்தில் வாக்குக்கு பணம் அளிக்கும் முறையை அரசியல் கட்சிகள் அறிமுகப்படுத்தி, தற்போது அது ஒரு பூதாகரப் பிரச்னையாக எழுந்துள்ளது.

இதன் மூலம், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்ற மனநிலைக்கு அரசியல் கட்சிகள் பலவும் வந்துவிட்டன. இதைத்தான் மக்கள் பலரும் அரசியல் கட்சிகள் மீது வைக்கும் புகாராகவும் உள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அரசு அலுவலகங்கள் முதல் அரசு ஒப்பந்தங்கள், திட்டப் பணிகள் என எங்கு பார்த்தாலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. அப்படியிருக்க மக்கள் மட்டும் வாக்குக்கு லஞ்சம் வாங்கக் கூடாது என்று வரிந்து கட்டிக் கொண்டு வாதாடுவது ஏன் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

கண்டானிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜாதித் தலைவர் செந்தில் கூறுகையில், அரசியல்வாதிகள் தான் மக்களின் பணத்தை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். 5 ஆண்டுகள் மக்களிடம் இருந்து சுரண்டும் பணத்தை தேர்தலின் போது மக்களுக்கே திருப்பிக் கொடுக்கிறார்கள். இதனை அப்படித்தான் பார்க்க வேண்டும் என்கிறார்.

தேர்தல் அதிகாரிகள் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கிறார்கள். சாலையில் செல்லும் வாகனங்களில் பெரும்பாலானவை பரிசோதனைக்கு உட்படுகிறது. ஆனாலும், என்னதான் கண்கொத்திப் பாம்பாக தேர்தல் ஆணையம் பணியாற்றினாலும், அரசியல் கட்சியினர், அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தங்களுக்கு பணம் அளிப்பார்கள் என்று பல கிராம மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டம் புறநகர்ப் பகுதியில் சாலையோரம் உணவகம் நடத்தி வரும் ஞானம் என்ற பெண்மணி, அரசியல் கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுக்கும் முறையை நினைத்து வருந்துகிறார். வாக்குக்கு மக்கள் பணம் பெற்றுக் கொள்கிறார்கள். பிறகு என்ன நடக்கும்? இப்படித்தான் அரசியல்வாதிகளும் தாங்கள் கெட்டதோடு நிற்காமல் மக்களையும் பணம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் வருத்தத்தோடு.

காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், பாஜக வேட்பாளர் எச். ராஜா என முக்கிய வேட்பாளர்களுடன் பரபரப்பாகக் காணப்படும் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 26 பேர் போட்டியிடுகிறார்கள்.

வாக்குக்கு பணம் வாங்குவதில் மக்களிடையே இரு வேறுக் கருத்துகள் இருப்பது போல, பணம் வாங்கிய நபருக்கே வாக்களிக்க வேண்டுமா என்பதிலும் இரு வேறு கருத்துகள் இருக்கின்றன. 

ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு வாக்களிக்காமல் இருந்தால் அது நமக்கு பாவத்தைச் சேர்க்கும் என்று கூறும் ஒரு கிராமத்தாரைப் பார்க்க நமக்குத்தான் பாவமாக இருந்தது.

அதே போல, பணம் கொடுப்பவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்பதில் எந்த கட்டாயமும் இல்லை. பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்கவில்லையே என்று வருந்தவும் வேண்டாம். ஏன் நாம் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்? நமது வாக்கினைப் பெற நமக்கு அவர்கள் பணம் கொடுத்து ஏமாற்றுகிறார். அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு வாக்களிக்காமல் நாம் ஏமாற்ற வேண்டும் என்கிறார் மற்றொரு விவரமான கிராமத்தார்.

சரி இவ்வளவு விவரமாக இருக்கும் கிராம மக்களிடம் நாம் வைத்த மிக முக்கியக் கேள்வி என்னவென்றால், ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் என்ன செய்வீர்கள்? 

ஒரு குடும்பத் தலைவர் இதற்கு அழகாக பதிலளித்தார். பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு ஏற்ப எங்கள் குடும்பத்தில் இருக்கும் வாக்குகளை பிரித்தளிப்போம் என்று.

பணம் கொடுப்பவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை என்கிறார்கள் ஒரு சிலர்.

அதே போல அரசு இயந்திரத்தில் பழுது இருப்பதால் பாதிக்கப்படும் முக்கிய நபர்கள் ஏழை மக்கள்தான்.  எனவே இதனை சரி செய்ய வேண்டியது லஞ்சம், ஊழலைத் துவக்கி வைத்த அரசு தானே தவிர நாங்கள் அல்ல என்று நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி சொல்கிறார் எழுதப்படிக்கத் தெரியாத கிராமத்தார்.

இவர்கள் இப்படி சொன்ன பிறகு நாம என்னத்தாங்க சொல்றது?

வாக்குக்கு பணம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம் என்பதை இங்கே ஒரு முறை நினைவூட்டிக்  கொள்கிறோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com