மோடி பெரும் முதலாளிகளின் காவலர்: மாயாவதி

பிரதமர் நரேந்திர மோடி பெரும் முதலாளிகளின் காவலாளியாகத் திகழ்வதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
 பகுஜன் சமாஜ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு வெள்ளி செங்கோல் வழங்கிய தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்.
 பகுஜன் சமாஜ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு வெள்ளி செங்கோல் வழங்கிய தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்.
Updated on
2 min read


பிரதமர் நரேந்திர மோடி பெரும் முதலாளிகளின் காவலாளியாகத் திகழ்வதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், தேர்தல் பிரசாரக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அக்கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தலைமை வகித்தார்.
இதில், மாயாவதி கலந்துகொண்டு பேசியது: 
காங்கிரஸ், பாஜக ஆட்சிக் காலங்களில் நாடு எவ்வித வளர்ச்சியையும் எட்டவில்லை. தனது தவறான கொள்கை, நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியை இழந்தது. ஹிந்துத்துவா கொள்கை, ஜாதி அரசியல், சிறுபான்மையினர், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் போன்ற காரணங்களால் பாஜக ஆட்சியை இழக்கப் போகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, வேலைவாய்ப்பு, கருப்புப் பணம் ஒழிப்பு, அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்றாமல், இந்தத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை மோடி ஏமாற்றப் பார்க்கிறார். 
தேர்தலில் வெற்றி பெற்றால் ஏழை மக்களுக்கு மாதம் ரூ. 6,000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுபோன்ற வாக்குறுதிகளை முதலில் அவர்கள் ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றி காட்டட்டும். மக்களுக்குப் பணத்தைக் கொடுக்காமல் அவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும்போது, ஏழ்மை தானாக ஒழியும்.
ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை சரிசெய்ய மோடிக்கு நேரம் இருந்ததில்லை. தனது உள்கட்சிப் பிரச்னையைத் தீர்ப்பதிலேயே அவர் தனது கவனத்தைச் செலுத்தினார். 
கடந்த 5 ஆண்டுகளில் ஆடம்பரச் செலவுக்காக செலவிடப்பட்ட தொகையை நாட்டின் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மோடி செலவிட்டிருக்கலாம்.  காங்கிரஸ், பாஜக ஆட்சிகளில் ஊழல் நடைபெறவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், இரு கட்சிகளின் ஆட்சியில் பாதுகாப்புத் துறை வரை ஊழல் நடைபெற்றுள்ளது. இதற்கு போஃபர்ஸும், ரஃபேலும்தான் சாட்சி.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் சிபிஐ, வருமான வரித் துறையில் ஆட்சியாளர்களின் தலையீடு இருந்தது. தங்களுக்கு எதிரானவர்களை இந்தத் துறைகளை வைத்து இரு கட்சிகளும் மிரட்டுகின்றன.
தேர்தலை மனதில் வைத்து பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மோடி அறிவித்தார். அதேவேளையில், இந்த ஆட்சி காலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள், சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டை மெல்ல மெல்ல பறித்துள்ளார். பாஜக ஆட்சி நீடித்தால் எதிர்காலத்தில் இடஒதுக்கீடே இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் அனைவரிடமும் உள்ளது. பகுஜன் சமாஜ் மத்தியில் ஆட்சியைப் பிடித்தால் இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள அனைத்து பதவிகளும் நிரப்பப்படும். ஏழை மக்கள் அனைவருக்கும் அரசு வேலை உறுதிசெய்யப்படும்.
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் நடைபெற்ற தவறுகளை மறைக்க பிரதமர் மோடி தற்போது தேசபக்தியை கையில் எடுத்துள்ளார். அவர் என்றுமே ஏழை, சிறுபான்மை, தலித் மக்களின் காவலாளியாக இருந்தது இல்லை. பெரும் முதலாளிகளின் காவலாளியாகத் திகழ்கிறார் என்றார் மாயாவதி.
பொருளாதார உதவி செய்யுங்கள்
வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய மாயாவதி, மற்ற கட்சிகளின் வேட்பாளர்களைப் போன்று பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் பணக்காரர்கள் இல்லை. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். அவர்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளைச் செய்யுங்கள் என தனது கட்சிக்காரர்களிடம் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com