தவிக்கும் தமிழகத்தின் தாகம் தீர்க்குமா தாழ்வுப்பகுதி? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்??

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்றைய நிலையில் இருந்து மாறி தமிழகத்துக்கு சாதகமான நிலைக்கு முன்னேறியுள்ளது.
தவிக்கும் தமிழகத்தின் தாகம் தீர்க்குமா தாழ்வுப்பகுதி? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்??

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்றைய நிலையில் இருந்து மாறி தமிழகத்துக்கு சாதகமான நிலைக்கு முன்னேறியுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு இன்று தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது நாளை இரவுக்குள் தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழகக் கரையை ஒட்டியவாறு கடந்து செல்லும் நிலையில் நேற்று இருந்தது. ஆனால், அதன் பாதையை காற்றின் சுழற்சி மாற்றி தமிழகத்துக்கு சாதகமான பாதையில் திசை திருப்பியுள்ளது. 

தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பது உண்மையா? 

இது குறித்து மிகுந்த நம்பிக்கையோடு ஒரு பதிவினை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார். முதலில் அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, குறைந்த காற்றழுத்தாழ்வு பகுதி மெல்ல தமிழகத்துக்கு சாதகமாக மாறி வருகிறது. தமிழகத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்ல இருந்த தாழ்வுப் பகுதியின் பாதையை காற்றின் சுழற்சி மாற்றியுள்ளது. எனவே, அது தமிழகம்  அல்லது தெற்கு ஆந்திராவுக்குத்தான். அப்படியும் இல்லை என்றால் கடலிலேயே சுற்றி சுற்றி மழையைப் பெய்ய வேண்டும். இந்த இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

இந்த தாழ்வு பகுதி புயலாக மாறி எந்த திசையில் பயணித்தாலும் அங்கு அதிக மழை, மிக அதிக மழை, மிக மிக அதிக மழை பெய்துத் தள்ளும். அவ்வளவு ஏன் அது தமிழகத்துக்கு வந்தால், வறட்சியான நிலப்பரப்பு கூட வெள்ளம் பாதித்த பகுதியாக மாறிவிடக் கூடும். இது தமிழகத்துக்குத்தானா என்பதை உறுதி செய்ய மேலும் ஒரு நாள் தேவைப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 60% தமிழகத்துக்கு சாதகமாகவே உள்ளது. ஆனால் இதுபோன்ற இயற்கை சக்திகளை கணிப்பதும், பின் தொடர்வதும் மிகவும் த்ரில்லிங்கான விஷயமாகவே இன்று வரை இருக்கிறது.

ஒவ்வொரு மாதிரிகளையும் பார்க்கும் போது எனது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. (தமிழகத்துக்கு வந்துடு என்ற பிரார்த்தனையோடு). ஒரு வேளை இந்த புயல் சின்னம் சென்னைக்கு அருகே கரையைக் கடந்தால் சென்னையின் அனைத்து ஏரிகளும் நிரம்பிவிடும். நமது அனைத்துத் தண்ணீர் பிரச்னைகளும் கானல் நீராக மாறிவிடும். ஆனால் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் புயல் சின்னம் சற்று பலமாக இருக்கும் என்பதால் நிச்சயம் சென்னையில் இருக்கும் ஒரு சில மரங்களையும் நாம் தியாகம் செய்யும் நிலை ஏற்படலாம் என்று வருத்தம் கலந்த ஏக்கத்தோடு தெரிவித்துள்ளார்.

சரி அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். அதாவது பிரார்த்தனை, நமக்கு தெய்வ நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ, வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களோ, வேறு வேறு வழிபாட்டு முறைகளைக் கொண்டவர்களோ, நமக்கு மேல் எந்த சக்தியும் இல்லை என்ற கொள்கைக் கொண்டவர்களாகவோ இருக்கலாம். ஆனால் நிச்சயம் இந்த தாழ்வுப் பகுதி தமிழகத்துக்கு சாதகமாக அமைய வேண்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிரவும் வேறு வழியில்லை.

எந்த ஒரு வகையிலாவது நமது கண்ணீர் துடைக்கப்படாதா என்று ஏங்கும் எண்ணற்ற தமிழக மக்களைக் காக்கவே வருண பகவான் இந்த தாழ்வுப் பகுதியை அனுப்பியிருப்பதாக நினைத்தால் நிச்சயம் உங்கள் பிரார்த்தனை பலிக்கும். 

வேண்டும் வேண்டும் மழை வேண்டும்.. வேண்டும் வேண்டும் தண்ணீரும் வேண்டும்! இதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாக ஒலிக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com