
காஞ்சிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுவதாக அறிவித்தும் பணிகள் தொடங்கப்படாமல் தாமதமாகி வருகிறது.
காஞ்சிபுரம் கோயில்களின் நகரமாகவும், பட்டு சேலை விற்பனை செய்வதில் புகழ் பெற்ற நகரமாகவும் விளங்கி வருகிறது. பட்டுசேலை வாங்குவதற்கும், காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜப்
பெருமாள் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோயில்களை தரிசிப்பதற்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டில் பெரும்பாலான நாள்கள் காஞ்சிபுரம் கோயில்களில் உற்சவம் நடந்து வருகிறது.
கடும் போக்குவரத்து நெரிசல்: இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, மார்கழி மாதத் தொடக்கத்தில் கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து பேருந்துகள் மூலம் திரளான பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு வந்து செல்கின்றனர். இதனால், செங்கழுநீரோடை வீதி, கோயில்களின் மாடவீதிகள், காந்தி சாலை, சாலைத்தெரு, சின்ன காஞ்சிபுரம், டி.கே.நம்பி தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பேருந்துகள் அதிக அளவில் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் முறையாக சாலையைப் பயன்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. அவசர ஊர்திகள் மருத்துவமனைக்குச் செல்லவதற்கு
இடையூறு ஏற்படுகிறது. நகர்ப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது.
இப்போக்குவரத்து நெரிசலைக் கவனத்தில் கொண்டு மாவட்ட காவல்துறை போக்குவரத்தில் மாற்றம் செய்தது. அதன்படி, மூங்கில் மண்டபத்திலிருந்து கீரை மண்டபம், ஆட்சியர் அலுவலகம் வரை அனைத்து வாகனங்களும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 3 மணியிலிருந்து 9 மணி வரையிலும் செல்ல தடை விதிக்கப்பட்டது.
மாறாக, அனைத்து வாகனங்களும் இனி பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால், பேருந்து நிலையம், மூங்கில் மண்டபம், காந்தி சாலை, ரங்கசாமி குளம், விளக்கடி கோயில் தெரு, கீரை மண்டபத்தை அடைந்து அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. காந்தி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு எளிதாக வாகனங்கள் அனைத்தும் சுழற்சி முறையில் சிரமமின்றி சென்று வருகின்றன. இருப்பினும், போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
புதிய பேருந்து நிலையம்: தற்போது உள்ள பேருந்து நிலையமோ 44 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அப்போதைய சூழலுக்குப் பிறகு தற்போது அதிக குடியிருப்புகள், வாகனங்கள் அதிகரித்து விட்டதால், காஞ்சிபுரம் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்து வருகிறது. இப்பிரச்னையை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்களிடமிருந்து கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, தமிழக அரசு கடந்த ஆண்டு கிளாம்பாக்கத்தில் நடத்திய எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் "காஞ்சிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும். இதற்காக, ரூ.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூர் கிராம பகுதியில் சுமார் 11 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் சிலர் பட்டா பிரச்னை தொடர்பாக வழக்கு தொடர்ந்ததால் சில நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன. ஏற்கெனவே, அறநிலையத்துறைக்கு சம்பந்தப்பட்ட இடம், கீழம்பி அருகே சித்தேரி மேடு, பொன்னேரிக்கரை ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு இடம் பார்க்கப்பட்டு பின்பு இடம் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், வரதராஜப்பெருமாள் பிரம்மோற்சவத்தை தொடர்ந்து அத்திவரதர் பெருவிழா நடைபெறவுள்ளது. இந்த உற்சவத்தைக் காண லட்சக்கணக்கானோர் காஞ்சிபுரம் வரவுள்ளனர். அவ்வாறு வருவோருக்கு தேவையான வசதிகள் செய்யப்படும் அளவுக்கு தற்போது நகர்ப்பகுதியில் வசதிகளும் இல்லை. எனவே, காஞ்சிபுரத்துக்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பெருநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுவது உறுதிதான். தமிழக அரசு இதற்காக ரூ.38 கோடி நிதியும் அறிவித்துள்ளது. இதற்காக, இடம் தேர்வு செய்யப்படும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், மக்களவை தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டது. இதனால், பேருந்து நிலையப்பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெற்ற பின்பும் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இதனால், பேருந்து நிலைய திட்டப் பணிகளை மேற்கொள்ள இயலாது. மே 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. அதன்பிறகே, புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.