

கோடை காலம் தொடங்கி விட்டால், குழந்தைகளுடன் குளிர்ச்சியான இடங்களை நாடிச் செல்வோர் அதிகம். அதிலும், உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களில், மார்ச் முதல் மே மாதம் வரையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படும்.
தமிழகத்தில் குளிர்ச்சியான பகுதிகள் பல இருந்தபோதிலும், இந்த மூன்று இடங்களுக்குச் செல்வதற்கு மட்டுமே பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இவற்றையெல்லாம் மிஞ்சிடும் வகையில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை இருந்த போதும், சுற்றுலாப் பயணிகளிடையே ஆர்வம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது கொல்லிமலை சுற்றுலாத் தலம். நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. 280 சதுர கிலோ மீட்டர் கொண்ட இம் மலை, 4,663 அடி (1,400 மீட்டர்) உயரம் கொண்டது. இதை வேட்டைக்காரன் மலை என்றும் கூறுகின்றனர். தாலுகா அந்தஸ்து பெற்றுள்ள கொல்லிமலையின் கீழ், வாழவந்திநாடு, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, தின்னனூர் நாடு, குண்டூர் நாடு, சேளூர் நாடு, தேவனூர் நாடு ஆகிய பகுதிகளும், ராசிபுரம் வட்டத்தின் கீழ், ஆலந்தூர் நாடு, குண்டுனி நாடு, திருப்புலி நாடு, எடப்புலி நாடு, சித்தூர் நாடு, பெரக்கரை நாடு, பெயில் நாடு, பள்ளப்பாடி நாடு, புதுக்கோம்பை நாடு உள்ளிட்ட 16 ஊராட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றின் கீழ் 269 குக் கிராமங்கள் உள்ளன.
உயிரினங்களைக் கொல்லும் சூர் (அரக்கன்) வாழ்ந்ததால், இம் மலைக்குக் கொல்லி எனும் பெயர் அமைந்தது என்ற மொழியியல் அடிப்படையற்ற கருத்தும் உண்டு. அங்குள்ள பழங்குடியின மக்களைக் காக்கும் தெய்வமாகக் கொல்லிப் பாவை விளங்கியதால், அதனடிப்படையில் கொல்லிமலை என அழைக்கப்பட்டது. இங்கு நிலவிய கடுமையான வெப்பச் சூழலின் காரணமாகவும் கொல்லி மலை என்ற பெயர் வந்தது என பல்வேறு கருத்துகள் உண்டு. சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.பி 200 - இல், இப் பகுதியைக் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆண்டு வந்துள்ளார். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றிகளைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறமையைக் குறிக்கும் சம்பவங்கள் இங்கு நடைபெற்றதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி (ஆடிப்பெருக்கு நாளில்) கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்படுகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளின்போது நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்வர். கொல்லிமலையைப் பொருத்தமட்டில், இங்குள்ள முக்கிய சுற்றுலாப் பகுதிகளாகக் கருதப்படுவது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசில்லா அருவி, நம் அருவி, இவைத் தவிர, வாசலூர்பட்டி ஏரி, அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மூலிகைப் பண்ணை, வியூ பாயிண்ட் பகுதிகள் தாம். நாமக்கல்லில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லிமலைக்கு, காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்லலாம். இல்லையெனில், மற்றொரு பாதையான முள்ளுக்குறிச்சி வழியாகவும், திருச்சி மாவட்ட எல்லையான புளியங்குறிச்சி வழியாகவும் செல்லலாம். முக்கிய சுற்றுலாத் தலங்கள் இருந்தபோதும், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலத்தவரும் கொல்லிமலை வருவதற்கு அதிக ஆர்வம் காட்டாத நிலை உள்ளது.
அரசியல் தலைவர்களே, வல்வில் ஓரி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தயக்கம் காட்டுவர். ஓரி விழாவில் பங்கேற்றால், தங்களது பதவிக்கு ஆபத்து என்ற அச்சம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இதனாலும், அரசியல் பிரமுகர்கள், கொல்லிமலையின் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இம் மலைக்குச் சொந்த வாகனங்கள் இல்லாமல் சென்றால், ஒவ்வொரு சுற்றுலாப் பகுதிக்கும் செல்வதற்கு அரசுப் பேருந்துகளை எதிர்பார்த்து பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. குடும்பத்துடன் குளுகுளு சீசனை அனுபவிக்கச் சென்றாலும், தங்குவதற்கோ, முக்கிய இடங்களுக்குச் செல்வதற்கோ சரியான வசதி, வாய்ப்புகள் இங்கில்லை. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசில்லா அருவி, நம் அருவி போன்றவற்றில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டுமே தண்ணீர் அதிகப்படியாக விழும்.
மற்ற மாதங்களில் இந்த அருவிகள் வறண்டு பாறைகளாகவே காட்சியளிக்கும். முக்கியமாக கோடை காலத்தின்போது தண்ணீரின்றி அருவிகள் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதில்லை. மேலும், 70 கொண்டை ஊசி வளைவுகள் என்பதால், சொந்த வாகனங்களில் வருவோர் மலையை எட்டுவதற்குள் பதற்றத்துக்குள்ளாகி விடுகின்றனர். குழந்தைகள், பெண்களுக்கு வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுகின்றன. ஏதாவது அவசரம் என்றாலும், 70 வளைவுகளைக் கடந்து சேந்தமங்கலம் அல்லது நாமக்கல்லுக்குத் தான் வரேவண்டிய சூழல் உள்ளது.
வாசலூர்பட்டி ஏரி... இந்த ஏரி கடந்த 2007 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஏற்காடு ஏரி போன்று பரப்பளவு இல்லை. சிறிய குளம்போல் இந்த ஏரி காட்சியளிப்பதால், அதில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் விரும்புவதில்லை. ரோஜா பூங்கா, வண்ண மலர் பூங்கா, தாவரவியல் பூங்கா போன்றவை பெயர் சொல்லும் அளவில் இல்லாததும் ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது. அன்னாசி, மலை வாழைப்பழம், தேன், மிளகு உள்ளிட்டவை இங்கு கிடைக்கின்றன. ருசியான, வித்தியாசமான பழங்கள் எதுவும் கிடைக்காததும், இங்கு வரும் மக்களை ஏமாற்றமடைய செய்கிறது. இதனால், கொல்லிமலைக்கு செல்லத் திட்டமிட்டு வரும் சுற்றுலாப் பயணிகள், அருகில் உள்ள ஏற்காட்டுக்குச் செல்வதைக் காண முடிகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடியின மலையாளி நல அமைப்பின் தலைவர் கே.குப்புசாமி கூறியது: கொல்லிமலை சுற்றுலா வளர்ச்சியில் அரசும், அதிகாரிகளும் அக்கறை காட்டவில்லை. விவசாயத்தை நம்பியுள்ள இங்குள்ள மக்கள், இந்தப் பகுதி உதகை போல மாறினால், வியாபார ரீதியிலும் வாழ்க்கையில் ஏற்றம் பெறுவர். அருவிகளில் சீசனில் மட்டுமே தண்ணீர் விழும் என்பதால், அதைக் கணக்கிட்டு, குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே மக்கள் இங்கு வருகின்றனர். ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். சரிவரப் போக்குவரத்து வசதியில்லை. ஏரிப் பகுதிகள் தூய்மையின்றி காணப்படுகின்றன.
கொண்டை ஊசி வளைவுகளில் அமர்ந்து சில் மது அருந்துவதால், வாகனங்களில் இங்கு வருவதற்கு பலரும் தயங்குகின்றனர். மரங்களுக்கு அவ்வப்போது தீ வைத்து விடுவதால், பல மரங்கள் எரிந்து வெயில் காலங்களில் குளிர்ச்சியற்ற தன்மை நிலவுகிறது. மற்ற சுற்றுலாத் தலங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுபோல், கொல்லிமலை வளர்ச்சியிலும் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்ட வேண்டும் என்பதுதான் இங்குள்ள பழங்குடியின மக்களின் எதிர்பார்ப்பு என்றார். நாமக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவகுமார் கூறியது: சுற்றுலாத் தலங்கள் பெரும்பாலும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வனத் துறைக் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். சுற்றுலாத் துறையைப் பொருத்தமட்டில், அரசு ஒதுக்கும் நிதியைப் பெற்று தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தான். அதன்பின் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தான் கவனித்துக் கொள்ள வேண்டும். கொல்லிமலை வளர்ச்சி பெறவில்லை என்று கூற முடியாது.
இங்குள்ள அருவிகளில் தண்ணீர் இருப்பதைக் கணக்கிட்டுத் தான் மக்கள் வருகின்றனர். எல்லா நாளும் சுற்றுலாப் பயணிகள் வரும் வகையில் கூடுதல் சுற்றுலாத் தலங்கள் அமைவது அவசியமான ஒன்று. அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவே கருதுகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.