
சென்னை: தமிழகத்தை ஏமாற்றிய ஃபானி புயல், அதிகபட்சமாக சென்னைக்கு 300 கி.மீ. தொலைவில் கடந்து செல்லும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ஃபானி புயல் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 870 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இதனைத் தொடந்து இது தீவிரப் புயலாகவும் நாளை அதித்தீவிரப் புயலாகவும் மாறி, மே 1ம் தேதி வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட தமிழகம் - தெற்கு ஆந்திராவுக்கு அருகே அதிகபட்சமாக 300 கி.மீ. தொலைவு வரை வந்து பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும்.
மழையைப் பொருத்தவரை ஏப்ரல் 30 மற்றும் மே1ம் தேதிகளில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
காற்றைப் பொறுத்தவரை வட தமிழகக் கடற்கரைப் பகுதியில் நாளை காலை பலத்த காற்றானது மணிக்கு 40- 50 கி.மீ. வேகத்திலும், சமயங்களில் 60 கி.மீ. வேகத்திலும், நாளை மாலை முதல் மணிக்கு 50 - 60 கி.மீ. வேகத்திலும், சமயங்களில் 70 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
கடல் அலையைப் பொறுத்தவரை ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1ம் தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு கடல் பகுதி கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனவே, மீனவர்கள் தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1ம் தேதிகளில் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.