அத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்: முழு விவரம் இதோ!

அத்திவரதர் பெருவிழா தொடங்கிய நாள் முதல் தமிழகமே அத்திவரதரின்  நாமத்தைத் தான் இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கிறது.
அத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்: முழு விவரம் இதோ!

அத்திவரதர் பெருவிழா தொடங்கிய நாள் முதல் தமிழகமே அத்திவரதரின்  நாமத்தைத் தான் இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கிறது.

கடந்த 31 நாட்களில் 45 லட்சம் மக்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர். இன்று முதல் இன்னும் 17 நாட்கள் இருக்கின்றன. இன்னும் எத்தனை லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று கணிக்கமுடியவில்லை. ஏற்கனவே சயன கோலத்தில் சுவாமியை தரிசித்தவர்கள் கூட நின்ற கோலத்தில் அவரை தரிசிக்க வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் கருதுகிறது. எனவே கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அத்திவரதர் தரிசனத்துக்கு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சிறப்பு தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெறும் இவ்விழாவில் பக்தர்கள் அத்திவரதருக்கு ரூ.500 செலுத்தி சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் ரூ.300 செலுத்தி சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்துகொள்ள மாவட்ட நிர்வாகமும், அறநிலையத் துறையும் ஏற்பாடு செய்துள்ளன. 

நாளொன்றுக்கு 500 பேர் சகஸ்ரநாம அர்ச்சனைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு 4 நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்குகிறது. ஒருவருக்கு ரூ.500 செலுத்தி சகஸ்ரநாம அர்ச்சனை டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் காலை 6.30 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நேரம் கூட்டத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. முன்பதிவு செய்யும் போது அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

www.tnhrce.gov.in  என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். இதற்கான முன்பதிவு ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன.

சிறப்பு தரிசனத்துக்கும் 4 நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் முற்பகல் 11 மணிக்கு இதற்கான முன்பதிவு தொடங்குகிறது. ரூ.300 செலுத்தி மாலை 6.30 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசிக்க முடியும். ஒவ்வொரு நாளும் 1900 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது. இதற்காக மாலை 6.30 மணிக்கு 950 டிக்கெட்டுகளும், இரவு 8.30 மணி தரிசனத்துக்கு 950 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்படுகிறது. 

சிறப்பு தரிசனம் மற்றும் சகஸ்ரநாம தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் மேற்கு கோபுரம் வழியாக முக்கியஸ்தர்கள் செல்லும் தனிவரிசையில் அனுமதிக்கப்படுவர். மேலும், இதற்கான விதிமுறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட நகலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு முறையில் 4 பேருக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஒவ்வொருவரின் ஆதார் எண்ணும் அவசியம். முன்பதிவு என்ற இடத்தில் கிளிக் செய்து அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும். இடையே ADD என்ற இடத்தைக் கிளிக் செய்து குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் சேர்த்து, கேப்சாவை சரியாகப் பதிவு செய்து சமர்ப்பித்தால், பணம் செலுத்துவதற்கான வாய்ப்பு வரும். அதன் மூலம் உரிய பணத்தை செலுத்த வேண்டும். 

பணம் செலுத்தியதும் உரிய ஆதாரம் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். அதற்காகவும் ஒருதனி பிரிவு உள்ளது. அதில் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணைப் பதிவு செய்தால் நீங்கள் செலுத்திய பணத்துக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் பிடிஎஃப் வடிவில் கிடைக்கும். அதனை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய குவிவதால், சில முறைகள் உங்கள் சமர்ப்பிப்பு நிராகரிக்கப்படலாம். தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் முன்பதிவு டிக்கெட்டை பதிவு செய்ய முடியும்.

முன்பதிவு தேதியை பதிவு செய்யும் பயனாளர்களால் மாற்ற முடியாது. இன்று பதிவு செய்ய நீங்கள் முயற்சித்தால் நான்கு நாட்களுக்குப் பிறகான தேதியில்தான் முன்பதிவு செய்ய முடியும். அதுவும் சனி மற்றும் ஞாயிறுகளில் இந்த தரிசனங்களுக்கு அனுமதி இல்லை.

ஒரு சில நாட்கள் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் கூட முன்பதிவு முடிந்து விடுகிறது என்பதுதான் ஆச்சரியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com