மக்களை முட்டாளாக்க நினைப்பது கண்டனத்திற்குரியது:  கொ.ம.தே. கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கருத்து 

கோதாவரி – காவிரி இணைப்பை பற்றி பேசி தமிழக மக்களை முட்டாளாக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்களை முட்டாளாக்க நினைப்பது கண்டனத்திற்குரியது:  கொ.ம.தே. கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கருத்து 

சென்னை: கோதாவரி – காவிரி இணைப்பை பற்றி பேசி தமிழக மக்களை முட்டாளாக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒருசில நாட்கள் கனமழை தொடர்ந்தால் மேட்டூர் அணை கூடிய விரைவில் முழு கொள்ளளவை எட்டும்.

கடந்த சில மாதங்களாக குடிக்கவே தண்ணீர் இல்லாமல் வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த தமிழகம் சற்று ஆறுதல் அடையும் நிலை உருவாகியிருக்கிறது. ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்பும் பட்சத்தில் திறந்துவிடப்படும் அதிகப்படியான தண்ணீரை கடலில் கலக்காமல் சேமித்து வைக்க தமிழக அரசிடம் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டும். கடந்த வருடம் 500 டிஎம்சி தண்ணீருக்கும் மேலாக கடலில் வீணாக கலக்க விட்டுவிட்டு மீண்டும் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடத்தில் கையேந்தி நின்றது போல இந்த முறையும் செய்ய போகிறோமா என்பதை தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் தெளிவுபடுத்த வேண்டும்.

குறிப்பாக கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட அவிநாசி – அத்திக்கடவு திட்டமானது இன்றைக்கும் அதேநிலையில் தான் உள்ளது. 60 ஆண்டுகாலமாக தமிழகத்தில் கிடப்பில் உள்ள நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றி தமிழக மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்காமல் கோதாவரி – காவிரி இணைப்பை பற்றி பேசி தமிழக மக்களை முட்டாளாக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே இப்போதைக்கு நிறைவேற்ற சாத்தியமில்லாத கோதாவரி – காவிரி இணைப்பை பற்றி தமிழக அரசு பேசிக்கொண்டிருக்காமல் தமிழகத்தில் உள்ள நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றி தமிழகத்தையும், தமிழக மக்களையும் குடிநீர் தட்டுப்பாட்டிலிருந்து காப்பாற்ற வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com