இன்று மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு: நீளும் மாவட்டங்களின் பட்டியல்!

சென்னை மட்டுமல்லாமல் பரவலாக இன்று மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
file photo
file photo

சென்னை: சென்னை மட்டுமல்லாமல் பரவலாக இன்று மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, தெளிவான வானம், மீன்போன்ற மேகங்கள், வெளிச்சம், கச்சிதமான சூரிய ஒளி என மீண்டும் இன்று மாலை அல்லது இரவில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு நாம் தயாராவோம்.

இன்று சென்னைக்கு மட்டுமல்ல, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் மழை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இதெல்லாமே தென்மேற்குப் பருவ மழை பெய்யாத பகுதிகளுக்கு என்பதை நினைவில் கொள்ளவும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து பலவீனமாகவே உள்ளது.

இன்று - எல்லா பகுதிகளிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்க வேண்டாம். கீழே குறிப்பிடும் மாவட்டங்களில் நிச்சயம் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களுக்கு இன்று ஒரு சிறப்பான நாள். அடுத்து வரும் நாட்களில், பருவ மழை போன்ற ஒரு மழைக் காலத்தை நாம் பார்ப்பது கடினம்தான். சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தேனி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களுக்கும் மழை வாய்ப்பு உள்ளது. இந்த மழை விருந்தில் திண்டுக்கல் - கொடைக்கானலும் சேர்ந்து கொள்ளும்.

சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஓரிரு மேகக் கூட்டங்கள் நகர்ந்து டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர் சென்றால் அங்கும் மழை பெய்யும்.

சேலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கும் மழை விருந்து உண்டு.

மேற்கு மாவட்டங்களான ஈரோடு, நீலகிரியில் தென்மேற்குப் பருவ மழை பெய்யாத குன்னூர் பகுதிகள், ஊட்டி, கோத்தகிரி பகுதிகளிலும் மழை பெய்யும். கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்யலாம்.

இதுபோன்ற மேக அமைப்பில், பெங்களூரு தினமும் மழை வாய்ப்பைப் பெறும். மைசூர் பகுதியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com