தென்மேற்குப் பருவ மழை: தமிழகத்தில் இயல்பான அளவு : திருச்சி உள்பட 12 மாவட்டங்களில் மழை குறைவு

தென்மேற்குப் பருவ மழை காலக் கட்டத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி  முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை தமிழகத்தில் சராசரியாக 185.2 மி.மீ. மழை பெய்துள்ளது.
தென்மேற்குப் பருவ மழை: தமிழகத்தில் இயல்பான அளவு : திருச்சி உள்பட 12 மாவட்டங்களில் மழை குறைவு
Updated on
2 min read


தென்மேற்குப் பருவ மழை காலக் கட்டத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி  முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை தமிழகத்தில் சராசரியாக 185.2 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவாக இருப்பினும், 12 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவே மழை பெய்துள்ளது. 

தென் மேற்குப் பருவமழை: நம் நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக் காலமாகும். இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பருவமழை நிகழாண்டில் கொஞ்சம் தாமதமாக ஜூன் 8-ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் பருவமழை நன்றாக இருந்தாலும், அதன்பிறகு குறைந்தது. மத்திய அரபிக்கடலில்  காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இது வலுவடைந்து வடமேற்கு நோக்கி நகர்ந்தபோது, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஈரப்பதக் காற்றை இழுத்துச் சென்றது. இதனால், பருவமழை குறைந்தது. தொடர்ந்து, ஜூன் 20-ஆம் தேதிக்கு பிறகு, மழை பெய்து வந்தாலும், பெரிய அளவில் மழை பெய்யவில்லை. 

அவலாஞ்சியில் 920 மி.மீ.: ஜூலை முதல் வாரத்தில்  மீண்டும் பருவமழை தீவிரமானது. தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில்  பருவமழை மிகவும்  தீவிரமானது. கேரளம், கர்நாடகத்தில் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில்  மிக பலத்த மழை பெய்து வந்தது. அதிலும், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் வரலாறு காணாத அளவுக்கு ( 920 மி.மீ. அளவு) மழை கொட்டித்தீர்த்தது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. 
இதன்பிறகு, தமிழகக் கடலோரப் பகுதியில், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவியதால், கடந்த  சில நாள்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இதன்காரணமாக, தமிழகத்தில் தற்போது  இயல்பான மழை கிடைத்துள்ளது.  

மழை அளவு: தென்மேற்குப் பருவமழை காலக்கட்டத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை  தமிழகத்தில் இயல்பான மழை அளவு 184.5 மி.மீ. ஆகும்.  தற்போது வரை 185.2 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவாக இருப்பினும், 12 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான மழையே  பெய்துள்ளது. 
சராசரி மழை அளவைக் காட்டிலும் 19 சதவீதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பெய்யும் மழை அளவு இயல்பான மழை அளவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இயல்பான மழை:  தமிழகத்தில் அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பான மழை பெய்துள்ளது.
அதிக மழை: சென்னை, நீலகிரி, வேலூர், விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமழை பெய்துள்ளது.  தேனி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தேனி மாவட்டத்தில்  இயல்பை விட 87 சதவீதமும், திருப்பூர் மாவட்டத்தில் இயல்பை விட 82  சதவீதமும், திருநெல்வேலியில் இயல்பை விட 70 சதவீதமும், திருவண்ணாமலையில் இயல்பை விட 68 சதவீதமும் அதிக மழை பெய்துள்ளது. 

குறைவான மழை: திண்டுக்கல், ஈரோடு, கரூர்,  மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி,  தஞ்சாவூர்ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பெய்துள்ளது. திண்டுக்கல்லில் இயல்பை விட 56 சதவீதம் குறைவாக  பெய்துள்ளது. இதுதவிர, நாமக்கலில் இயல்பைவிட 51 சதவீதமும், நாகப்பட்டினத்தில்  இயல்பைவிட 46 சதவீதமும்  குறைவாக மழை பெய்துள்ளது.  

இன்னும் 40 நாள்கள்: தமிழகத்தில் பெய்த மழை அளவு குறித்து சென்னை  வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரனிடம்  கேட்டபோது, தென்மேற்கு பருவமழை காலக்கட்டத்தில், தமிழகத்தில் தற்போது வரை இயல்பான மழை அளவு  பதிவாகியுள்ளது. இருப்பினும், திருச்சிராப்பள்ளி  உள்பட பல மாவட்டங்களில் மழை அளவு இயல்பை விட குறைந்துள்ளது. பருவமழை முடிய இன்னும் 40 நாள்கள் இருக்கின்றன. வரும் நாள்களில் பருவமழை, மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றை பொருத்து, மழை அளவு அமையும் என்றார் அவர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com