சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு

ஈரோடு பகுதியில் சூரியனைச் சுற்றி ஏற்பட்ட ஒளி வட்டத்தை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு
Updated on
1 min read

ஈரோடு பகுதியில் சூரியனைச் சுற்றி ஏற்பட்ட ஒளி வட்டத்தை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
 ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை காலத்தைப்போல வெயில் வாட்டியது. இந்த நிலையில் காலை 11 மணி அளவில் திடீரென சூரியனைச் சுற்றிலும் ஒளி வட்டம் தோன்றியது. இதனால் சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்தது.
 வட்டத்தின் விளிம்பில், வானவில் தோன்றும்போது ஏற்படும் நிறங்கள் சூழ்ந்திருந்தன. திடீரென வானில் இந்த மாற்றத்தைக் கண்ட ஈரோடு, கிருஷ்ணம்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பலர் தெருக்களில் திரண்டு இந்த அதிசய நிகழ்வைக் கண்டு ரசித்தனர்.
 ஏராளமானோர் தங்கள் வீட்டு மாடிக்கு சென்று வானில் தோன்றிய இந்த ஆபூர்வ நிகழ்வை கண்டு ரசித்ததோடு தங்கள் செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
 அதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வேகமாக பரவியது. இதனால் ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, சித்தோடு, பவானி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் சூரியனைச் சுற்றி ஏற்பட்டுள்ள ஒளி வட்டத்தை நேரில் பார்த்தனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஒளிவட்டம் நீடித்தது.
 இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.மணி கூறியதாவது:
 வானில் மழை மேகங்கள் சூழ்ந்து இருக்கும்போது, சூரிய ஒளி 22 டிகிரியில் விழுந்தால் ஒளிச்சிதறல் ஏற்படும். அப்போது சூரியனைச் சுற்றிலும் இதுபோன்ற வளையம் ஏற்படும். இதேபோல நிலவிலும் வளையம் தோன்றும். இது ஒளிச்சிதறலின் பரிணாமம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com