
திமுக இளைஞரணியில் உறுப்பினராகச் சேருவதற்கான வயது வரம்பு 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சென்னை, கிண்டியில் மாநில, மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம், அதன் செயலர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
15 முதல் 30 வயதுள்ளோர் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி, 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இனி 35 வயது வரை உள்ளவர்கள் இளைஞர் அணியில் உறுப்பினராகச் சேர்க்கப்படுவார்கள். மேலும், உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப் படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை உடனுக்குடன் வழங்கப்பட உள்ளது.
நவம்பர் 14-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் 10 ஆயிரம் பேர் வீதம் ஒட்டுமொத்தமாக 30 லட்சம் பேரை இளைஞரணியில் சேர்க்க வேண்டும்.
நீர்நிலைகள் தூர்வாருதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளில் இளைஞரணியினர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள மத்திய அரசின் அஞ்சல், ரயில்வே உள்ளிட்ட துறைகளின் வேலைவாய்ப்புகள் வடமாநிலத்தவர்களுக்கு வழங்கப்படுவது கண்டனத்துக்குரியதாகும். இனிவரும் காலங்களில் தமிழகத்தில் காலியாக உள்ள மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏழை மாணவர்களைப் பாதிக்கும் வகையில் உள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், இளைஞரணி துணைச் செயலர்கள் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, பைந்தமிழ்பாரி, ஜோயல் உள்ளிட்ட இளைஞரணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.