வறட்சியை தாங்கும் புதிய நெல் ரகம்: சோதனை அடிப்படையில் பயிரிடத் திட்டம்; அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியைத் தாங்கும் வகையில் புதிய நெல் ரகமானது பரமக்குடி பகுதியில் சோதனை அடிப்படையில் பயிரிடப்பட உள்ளது என மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின்
Published on
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியைத் தாங்கும் வகையில் புதிய நெல் ரகமானது பரமக்குடி பகுதியில் சோதனை அடிப்படையில் பயிரிடப்பட உள்ளது என மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி ஜே.டேனியல் செல்லப்பா கூறினார்.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் விஞ்ஞானி ஜே.டேனியல் செல்லப்பா, ஆட்சியர் கொ.வீரராகவ ராவை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
 முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி தொழில்முனைவோருக்கான பயிற்சிப் பட்டறை நடத்தப்படவுள்ளது. அதில், மிகக் குறைந்த செலவில் குடிநீரைச் சுத்திகரிக்கும் வடிகட்டி சாதனத்தை உற்பத்தி செய்வதற்கும், விவசாயிகள் மிகக்குறைந்த செலவில் மண் வளத்தை அறிவதற்கான சாதனத்தை கையாளுவதற்கும், விவசாய உற்பத்திப் பொருள்கள், மீன்களை கருவாடாக்குதல் போன்ற உலர்த்துதல் தொடர்பான நவீன முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்படவுள்ளன. வாழைப்பழத்தை சாறாக்கி நீண்ட நாளுக்கு வைக்கும் புதிய முறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 மழை நீரைச் சேகரிக்கும் புதிய முறைகளை ராமநாதபுரத்தில் அறிமுகப்படுத்துவது அவசியம். உள்ளாட்சி நிர்வாகங்கள் விநியோகிக்கும் நீரை வீணாக்காமல் பயன்படுத்தும் வகையிலே புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியைத் தாக்குப் பிடிக்கும் வகையில் நெல் ரகத்தை அறிமுகப்படுத்த ஆட்சியர் கேட்டுக் கொண்டார். அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்துக்கு என பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் கண்டறியப்பட்ட "டிசிடிஎம்1 டியூப்ராஜ்' எனும் புதிய வகை நெல், பரமக்குடியில் சோதனை அடிப்படையில் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 நூறு நாள்களுக்கு மேலாக வளர்ந்து மகசூல் தரும் அந்த நெல் ரகம், வறட்சியில் எந்த அளவுக்கு மகசூல் தருகிறது என்பதை அறியவே மாதிரி அளவில் பயிரிடப்படுகிறது. அதைப் போலவே நிலக்கடலை, உளுந்து, சோளம், பயறு வகைகளும் புதிய ரகங்களாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
 நியூட்ரினோ ஆய்வு ஆபத்தானது இல்லை: நியூட்ரினோ ஆராய்ச்சி என்பது ஆபத்தானதல்ல. இயற்கையாக உள்ள நியூட்ரினோவை மனித வளர்ச்சிக்கான பயன்பாட்டுக்கு உகந்ததாக மாற்றும் வகையில்தான் நியூட்ரினோ ஆராய்ச்சிகள் நடத்தப்படும். ஆகவே மக்கள் நியூட்ரினோ ஆராய்ச்சியை ஆபத்தானதாக நினைப்பது துரதிருஷ்டவசமானது என்றார்.
 மூத்த விஞ்ஞானியை ராமநாதபுரம் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் மற்றும் அறிவியல் மையத்தைச் சேர்ந்த வாசன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com