தமிழகத்தில் வெண்மைப் புரட்சி எதிர்பார்ப்பில் பால் உற்பத்தியாளர்கள்

தமிழகத்தில் வெண்மைப் புரட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் வெண்மைப் புரட்சி எதிர்பார்ப்பில் பால் உற்பத்தியாளர்கள்
Published on
Updated on
2 min read


மன்னார்குடி: தமிழகத்தில் வெண்மைப் புரட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 1.50 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில், அரசால் நடத்தப்படும் ஆவின் மூலம் 35 லட்சம் லிட்டர் வரைதான் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள 1.15 கோடி லிட்டர் பால் தனியார் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. பாலின் தேவையைப் பொருத்தவரை சென்னைக்கு, மட்டும் தினமும் 45 லட்சம் லிட்டர் தேவைப்படுகிறது. இதில், தலா 15 லட்சம் லிட்டர் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமும், 15 லட்சம் லிட்டர் ஆந்திர மாநிலத்திலிருந்து தனியார் நிறுவனம் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 40 லட்சம் லிட்டர் வரைதான் இருப்பு வைக்க வசதி உள்ளது. முதல்வராக ஜெ. ஜெயலலிதா இருந்தபோது, ஆவின் மூலம் ஒரு கோடி லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யவேண்டும் என்றும், இதை இருப்பு வைப்பதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவித்தார். ஆனால், இன்று வரை அதற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெறவில்லை.

அரசின் சார்பில் கரும்பு, கோதுமை மற்றும் நெல்லுக்கான கொள்முதல் விலை ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தி அறிவிக்கப்படும் நிலையில், பாலுக்கான கொள்முதல் விலை மட்டும் அவ்வாறு உயர்த்தப்படுவதில்லை.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழாண்டுதான் (2019) பசும் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தி, ஒரு லிட்டர் பால் ரூ. 32 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், ஆவின் நிர்வாகம் பாலில் உள்ள சத்துக்களின் அடிப்படையில் லிட்டருக்கு ரூ. 28 தான் வழங்குகிறது. கால்நடைக்கான தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பாலுக்கான கொள்முதல் விலை போதுமானதாக இல்லை. இதனால், பால் உற்பத்தியாளர்கள் பலர் இத்தொழிலை விட்டு வெளியேறுகிறார்கள்.

பால் உற்பத்தியாளர்களைக் காக்க கடந்த 2017-ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவும் இன்று வரை நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.

எதிர்பார்ப்பு: பால் உற்பத்தியாளர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய மாநில இணையத்தின் நிர்வாக இயக்குநரும், ஆவின் நிர்வாக ஆணையரும் ஒரே அதிகாரியாக இருப்பதால், நிர்வாக ரீதியான நடவடிக்கைக்கு பெரும் தடையாக உள்ளது. எனவே, தனித்தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

போனஸ், ஊக்கத் தொகையை தாமதமில்லாமல் வழங்க வேண்டும். தினசரி பால் கொள்முதலை 50 லட்சம் லிட்டர் என நிர்ணயம் செய்ய வேண்டும். சத்துணவுடன் குழந்தைகளுக்குப் பாலையும் வழங்க வேண்டும். பால் பொருள்கள் இறக்குமதிக்குத் தடை செய்ய வேண்டும். இதன் மூலம்தான் பால் உற்பத்தி தொழிலைப் பாதுகாக்க முடியும். இவைகள் தடையின்றி நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தமிழகத்தில் வெண்மைப் புரட்சி ஏற்படும் என்பது பால் உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து, மன்னார்குடியை அடுத்த வல்லூர் பால் உற்பத்தியாளர் என். இளங்கோவன் கூறியது:

அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பால் கொள்முதலுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்திலும் மானியம் வழங்க வேண்டும். கறவை மாடுகளுக்கான தீவனங்களும் 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். பால் கறவையாளர்களுக்குப் பாக்கி இல்லாமல் ஆவின் நிர்வாகமே பணம் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ. 200 கோடி பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

கொள்முதல் செய்யப்படும் பாலுக்குப் பணம் மட்டுமே வழங்க வேண்டும். பொருள்களாக வழங்கக் கூடாது. வெளிநாடுகளிலிருந்து பால் பொருள்கள் இறக்குமதி செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

மன்னார்குடியை அடுத்துள்ள கோட்டூர் இருள்நீக்கி கிராமத்தைச் சேர்ந்த பால் கறவையாளர் கே. செங்கொடி கூறியது:

கடந்த 5 ஆண்டுக்கு முன் கோமாரி நோய்த் தாக்குதல் காரணமாக ஏராளமான கறவை மாடுகள் இறந்தன. இதற்காக எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதனால், பால் உற்பத்தியாளர்கள் கடன் சுமையில் தள்ளப்பட்டனர். எனவே, பால் உற்பத்தி தொழிலைப் பாதுகாக்க கறவை மாடுகள் வாங்க நிபந்தனையற்ற எளிமையான முறையில் வங்கிக் கடன் வழங்கவேண்டும்.

கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான இடங்களில் கால்நடை மருத்துவமனைகள் அமைப்பதுடன், பல இடங்களில் கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள், மருந்துகள் இல்லாமல் பூட்டிக்கிடக்கும் கால்நடை மருத்துவமனைகளை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் கே. முகமது அலி கூறியது:

தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ரூ. 3.50 கோடிக்கு ஆவின் மூலம் பாலாகவே (பாக்கெட் பால் அல்ல) விற்பனை செய்யப்பட்ட நிலையில், அந்த நிறுவனம் இதுவரை அதற்கான தொகையை செலுத்தவில்லை. இத்தொகையை வசூலிப்பதில் ஆவின் நிர்வாகம் மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது. இதுபோன்ற முறைகேடு மற்றும் நிர்வாக சீர்கேடுகளால் ஆவின் நிர்வாகம் தள்ளாட்டதில் உள்ளது.

தமிழகம் முழுவதும் 21 பால் ஒன்றியங்கள் உள்ளன. இதில் சேலம், மதுரை, திருச்சி மட்டும் லாபத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து ஒன்றியங்களும் நஷ்டத்தை நோக்கிப் பயணிப்பதாக தெரிவிக்கின்றனர்.

தேவையற்ற எண்ணிக்கையில் அதிகாரிகள், அலுவலர்களை நியமித்திருப்பதும், பால் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கப்படும் நிர்பந்தங்களும், பால் கொள்முதல் செய்ய இந்தியா முழுவதும் ஐஎஸ்ஐ பார்முலா பின்பற்றப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் வெளிநாடுகளைப் போல், எம்.ஆர்.எப். பார்முலா பின்பற்றுவது போன்ற நிர்வாக குளறுபடிகளும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் இதற்கு காரணங்களாகும். இக்குறைபாடுகளைக் களைந்து, நிர்வாக சீர்திருத்தம் செய்தால் மட்டுமே தமிழகத்தில் வெண்மைப் புரட்சி ஏற்பட வழி பிறக்கும் என்றார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com