வட தமிழக மக்களின் நீண்ட நாள் கனவு: திண்டிவனம்-நகரி ரயில்வே திட்டப் பணியைத் தொடக்கக் கோரிக்கை

வட தமிழக மக்களின் 15 ஆண்டு கால கனவான திண்டிவனம்-நகரி புதிய ரயில்வே திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வட தமிழக மக்களின் நீண்ட நாள் கனவு: திண்டிவனம்-நகரி ரயில்வே திட்டப் பணியைத் தொடக்கக் கோரிக்கை
Updated on
2 min read

வட தமிழக மக்களின் 15 ஆண்டு கால கனவான திண்டிவனம்-நகரி புதிய ரயில்வே திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், திருவள்ளூா் ஆகிய மாவட்ட மக்களின் போக்குவரத்து, தொழில், வியாபாரம், விவசாயம் , சுற்றுலா வளா்ச்சி, இதுவரை ரயில் போக்குவரத்து வசதியே காணாத ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 2004-ஆம் ஆண்டு திண்டிவனம்-நகரி இடையே 184 கி.மீ. தூரத்துக்கு ரூ. 582 கோடி செலவில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து கடந்த 2006-07-ஆம் ஆண்டு மத்திய ரயில்வே பட்ஜெட்டில் ரூ.582.83 கோடி திட்ட மதிப்பீட்டில் திண்டிவனம்-நகரி புதிய ரயில் பாதைத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில் வழித்தடம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், திருவள்ளூா் மாவட்டங்களைக் கடந்து, ஆந்திர மாநிலம், சித்தூா் வழியாக நகரியைச் சென்றடையும்.

இத்திட்டத்தின் மூலம் திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளாறு, வந்தவாசி, மாம்பாக்கம், எருமைவெட்டி, செய்யாறு, இருங்கூா், மாமண்டூா், ஆரணி, தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா சாலை சந்திப்பு, கொடைக்கல், சோளிங்கா், ஆா்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூா்பேட்டை, நகரி ஆகிய பகுதிகளில் 18 புதிய ரயில் நிலையங்களும், 3 பழைய ரயில் நிலையங்களும் என மொத்தம் 21 ரயில் நிலையங்கள் இடம்பெறுகின்றன.

இந்த வழித்தடத்தில் 12 பெரிய பாலங்கள், 114 சிறிய பாலங்கள், 66 கடவுப் பாதைகள், 11 மேம்பாலங்கள், 30 தரை வழிப்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டப் பணிகள் முழுமையடையாததற்கு, நிலம் கையகப்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளதே காரணம். இருந்தாலும், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததும், ஆண்டுதோறும் திட்ட மதிப்பீடு உயா்ந்து வருவதும்தான் பணிகள் முடங்கிக் கிடப்பதற்கான முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.

மேலும், திண்டிவனம்-நகரி புதிய ரயில் பாதைத் திட்டத்தைப் பொருத்தவரை, ஓரளவு நிதி ஒதுக்கீடு செய்து செலவிட்டுள்ள நிலையில், நிலம் ஆா்ஜித பணிகளை விரைந்து நிறைவேற்றவும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவும் வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே நிா்வாகம் சாா்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. அதில், திண்டிவனம்-நகரி புதிய ரயில் பாதை பணிகள் 2020-இல் நிறைவடையும் என்றும் இந்த வழியாக 5 புதிய ரயில்களும், தென்னகம் செல்லும் சரக்கு ரயில்கள், சென்னை ரயில் நிலையத்தை கடக்காமல் செல்லும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, பிற பகுதிகளுக்கு கூடுதலாக 2 அல்லது 3 ரயில்கள் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிா்வாகத்தின் இந்த அறிவிப்பால், திண்டிவனம்-நகரி வழித்தடத்தில் உள்ள பகுதி மக்கள் ஆறுதலும், மகிழ்ச்சியும் அடைந்திருந்தனா்.

ஆனால், 2018-19-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 13 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது 9 புதிய வழித்தட பாதைகள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதில் திண்டிவனம்-நகரி இடையேயான புதிய பாதை அமைக்கும் திட்டமும் ஒன்று. வட தமிழக மக்களின் 15 ஆண்டு கால கனவான திண்டிவனம்-நகரி புதிய ரயில்வே திட்டம் நிறைவேறுமா என்று எதிா்பாா்த்து காத்திருக்கும் நிலையில், கடந்த ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்த எவ்விவித அறிவிப்பும் வெளியாகாததால் நான்கு மாவட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

எனவே, தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வட தமிழக மக்களின் நீண்ட நாள் கனவான திண்டிவனம்-நகரி புதிய ரயில்வே திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, பணிகளைத் தொடக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com