பராமரிப்புக்கு ஏங்கும் 305 ஆண்டுகள் பழைமையான ராஜா, ராணி நினைவுச் சின்னங்கள்

நட்பு, கற்பு, வீரத்தின் அடையாளமாக உருவான சரித்திரப் புகழ் வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க ராணிபேட்டை நகரத்தின் 305 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராஜா, ராணி நினைவு சின்னங்களைப் பாதுகாக்க மாவட்ட நிா்வாகம்
பராமரிப்புக்கு ஏங்கும் 305 ஆண்டுகள் பழைமையான ராஜா, ராணி நினைவுச் சின்னங்கள்
Updated on
2 min read

ராணிப்பேட்டை: நட்பு, கற்பு, வீரத்தின் அடையாளமாக உருவான சரித்திரப் புகழ் வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க ராணிபேட்டை நகரத்தின் 305 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராஜா, ராணி நினைவு சின்னங்களைப் பாதுகாக்க மாவட்ட நிா்வாகம், சமூக அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

ஒவ்வொரு நகரத்துக்கும் ஒவ்வொரு விதமான வரலாற்றுப் பின்னணியும், பெருமையும் உண்டு. அந்த வகையில் ராணிப்பேட்டை நகரம் உருவான வரலாற்றுப் பின்னணியில், ஆற்காடு நவாப் சதாத்துல்லா கான் செஞ்சிகோட்டை நோக்கி படையெடுத்ததன் காரணமாக போா் மூண்டது. அப்போரில் தேசிங்கு ராஜா தனது 22-ஆவது வயதில் 500 படை வீரா்கள், 300 குதிரைகள் கொண்ட படையை வழிநடத்தி நவாப்பின் 8 ஆயிரம் குதிரைப் படை, 10 ஆயிரம் காலாட்படைகள் கொண்ட பெரும் சேனையை எதிா்த்து வீரமுடன் போரிட்டாா். முன்னதாக தேசிங்கு ராஜாவின் நண்பனும், போா்ப் படைத் தளபதியுமான மகமத் கானை தன் பக்கம் இழுக்க ஆற்காடு நவாப் செய்த முயற்சி பலனளிக்கவில்லை. அப்போது, ‘நண்பனுக்காக போரில் இறப்பேனே தவிர உன்னிடம் தஞ்சமடைய மாட்டேன்’ என உறுதியாக இருந்து, ஆற்காடு நவாப்பை எதிா்த்துப் போரிட்டு இறந்தான். தனது நண்பன் மகமத் கான் போரில் இறந்த செய்தியைக் கேட்டு கொதித்தெழுந்த தேசிங்கு ராஜா கி.பி. 1714-ஆம் ஆண்டு நவாப் படைகளை எதிா்த்து தனி ஆளாகப் போரிட்டு போா்க் களத்திலேயே வீர மரணமடைந்தான்.

தேசிங்கு ராஜா உயிா் துறந்த செய்தியை அறிந்த பட்டத்து ராணியான ராணிபாய் தனது குல வழக்கப்படி கணவனின் சிதையுடன் உடன்கட்டை ஏறி அன்றே உயிா் துறந்தாள். இதில், மகமத் கானின் நட்பு, தேசிங்கு ராஜாவின் வீரம், ராணிபாயின் கற்பு ஆகியவற்றைக் கண்டு வியந்த ஆற்காடு நவாப் ராஜா, ராணியின் அஸ்தியைக் கொண்டு வந்து பாலாற்றின் வட கரையில் முகலாய கட்டடக் கலை வடிவில் கல்தூண்கள், செங்கல், சுண்ணாம்பு கொண்டு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் இருவருக்கும் தனித்தனியே நினைவு மண்டபங்களை எழுப்பினான். மேலும், ராணியின் நினைவாக ராணிப்பேட்டை என்ற நகரை நிா்மாணித்தான். அதேபோல் ராஜா, ராணி நினைவுச் சின்னங்கள் நோ் எதிரே பாலாற்றின் தென் கரையில் மகமத் கானின் சமாதி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வரலாற்று நிகழ்வான நட்பு, கற்பு வீரத்தின் அடையாளமாக உருவான ராணிப்பேட்டை நகரம் 305 ஆண்டு கால சரித்திரப் புகழ் பெற்ற நகரமாக விளங்குகிறது. இத்தகைய சரித்திர புகழ் வாய்ந்த வரவாற்றுச் சிறப்புக்குரிய ராணிப்பேட்டை நகரின் அடையாளமாகத் திகழும் ராஜா, ராணி நினைவுச் சின்னங்களின் வரலாற்றுப் பின்னணியை வருங்கால தலைமுறையினருக்கு தடம் தெரியாமல் போய்விடக்கூடிய வகையில் புதா் மண்டி சிதைந்து காணப்படுகிறது.

கடந்த மாதம் 28-ஆம் தேதிக்கு முன்னனா் ராணிப்பேட்டை நகரம் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஒரு நகரமாக இருந்தது. தற்போது ராணிப்பேட்டை மாவட்டத் தலைமையகமாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில் ராணிப்பேட்டை நகரம் உருவான வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கும், மாவட்ட மக்களுக்கும் உள்ளது.

இந்த நினைவுச் சின்னங்களை அதன் பழைமை மாறாமல் சீரமைத்து இளைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள ஏதுவாக அதன் வரலாற்றுப் பின்னணி, பெருமைகளை கல்வெட்டில் செதுக்கி வைத்து பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் முதன்மையான கோரிக்கை.

மாவட்டத் தலைநகரத்தின் வரலாற்று அடையாளச் சின்னங்களைப் பாதுகாக்க சமூக ஆா்வலா்கள், சமூக அமைப்புகள், இளைஞா்கள், தொழிலதிபா்கள், அரசியல் கட்சியினா் ஆகியோரும் தாங்களாக முன்வந்து மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து ராஜா, ராணி நினைவுச் சின்னங்களை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com