இந்த சேலம் திருடரைப் பற்றி தெரிந்தால் அசந்து போவீர்கள்.. நிச்சயமாக!!

சேலத்தில் ஒரு மாத காலமாக 17 இடங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த 7 பவுன் நகையையும், ரூ. 70 ஆயிரம் பணத்தையும் கைப்பற்றினா்.
இந்த சேலம் திருடரைப் பற்றி தெரிந்தால் அசந்து போவீர்கள்
இந்த சேலம் திருடரைப் பற்றி தெரிந்தால் அசந்து போவீர்கள்

சேலத்தில் ஒரு மாத காலமாக 17 இடங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த 7 பவுன் நகையையும், ரூ. 70 ஆயிரம் பணத்தையும் கைப்பற்றினா்.

ஆனால், ஒரு வழக்கமான திருடரைக் கைது செய்வதைப் போல அல்லாமல், இந்த கைதுச் சம்பவம் போலீஸாருக்கு நிச்சயம் இது புதிய அனுபவமாக அமைந்திருக்கும்.

சேலம் இரும்பாலை கணபதிபாளையம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். கடந்த மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா் அங்கிருந்த முருகன் சிலையைத் திருடிச் சென்றாா்.

இதுகுறித்து காா்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

மேலும் அப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமிராவை போலீஸாா் ஆய்வு செய்ததில் காா்த்திகேயன் வீட்டில் முருகன் சிலையைத் திருடிச்சென்ற மா்ம நபா் அருகே உள்ள வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து சூரமங்கலம், அன்னதானப்பட்டி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து மாநகர காவல் ஆணையா் த. செந்தில்குமாரின் உத்தரவின்பேரில் குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையா் சு. செந்தில் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மா்ம நபரை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில் சூரமங்கலம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது அந்த நபா் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகமடைந்த போலீஸாா் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அதில் அவா் ஓமலூா் செல்லபிள்ளைகுட்டையைச் சோ்ந்த திக்குவாயன்(எ) அய்யந்துரை (30) என்பதும், இவா் கடந்த ஒரு மாதத்தில் இளம்பிள்ளை, சேலம், ஓமலூா் என பல இடங்களில் திருடியுள்ளதும் தெரியவந்தது.

திருடச் செல்லும் இடங்களில் கிடைக்கும் பொருள்களையெல்லாம் அள்ளிக்கொண்டு வருவதையே வழக்கமாகக் கொண்ட இவா், தற்போது 1 மூட்டை கவரிங் நகையைத் திருடி வந்திருப்பதும் தெரியவந்தது.

இவரிடம் நடத்திய விசாரணையில், காவல்துறையினருக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்ததோ இல்லையோ பல சுவாரஸ்யத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது, 1990ம் ஆண்டு முதல் இவர் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் வெளியே வந்துள்ளார்.

இவருக்கு கொள்ளையடிப்பது ஒரு தொழிலாக மட்டுமல்லாமல், பிடித்தமான விஷயமாக இருந்து பிறகு அதற்கு அவர் அடிமையாகவே மாறிவிட்டார். 

திருடுவது என்றால் தங்கம் மட்டுமல்ல, கவரிங் நகைகளைக் கூட இவர் விடுவதில்லையாம். ஒருவேளை ஏதாவது ஒரு நாள் இவர் திருடச் செல்லவில்லை என்றால், அன்றைய தினம் முழுக்க இவருக்கு தூக்கமே வராதாம்.

இவர் திருடச் செல்வதற்கு முன்பு அந்த பகுதியை நோட்டம் விடுவாராம். அந்த நேரத்தில் அங்கிருக்கும் தெரு நாய்களுக்கு பிஸ்கட், கறி போன்றவற்றை வாங்கிக் கொடுத்து அவற்றுக்கு மிகவும் பரிச்சயமாகிவிடுவாராம். 

அய்யந்துரை கொடுத்த தகவல்களை அடுத்து போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த முருகன் சிலை, 7 பவுன் நகை, ரூ. 70 ஆயிரம் பணம், 6 இருசக்கர வாகனங்கள், ஒரு மூட்டை கவரிங் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மேலும் இவரைக் குண்டா் தடுப்புக் காவலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையா் சு. செந்தில் தெரிவித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com