
சென்னை: பாத்திமா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது பற்றி தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோதிலும், தமிழக அரசுக்கு இந்த பரிந்துரையை முன் வைத்துள்ளது.
அந்த பரிந்துரையில், மாணவி பாத்திமா தற்கொலை நிகழ்வுக்குப் பிறகு மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கவனத்தில் கொண்டு, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சரியாக படிக்காத மாணவர்கள் ஊக்குவித்து படிக்க வைக்கும் கடமை பேராசிரியர்களுக்கு உண்டு. சென்னை ஐஐடி மட்டுமல்லாமல் மற்ற ஐஐடிகளில் படிக்கும் மாணவர்களின் தற்கொலைகளையும் தடுக்க தீர்வு காண வேண்டும்.
இளம் மாணவர்கள் தற்கொலைகளை தடுக்கக் கூடிய நிரந்தரத் தீர்வைக் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கும் சரியான நேரம் இது எனறும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சென்னை ஐஐடி-யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த மாணவி பாத்திமா லத்தீப். இவா், கடந்த நவம்பா் 9-ஆம் தேதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக விடுதிக் காப்பாளா் லலிதாதேவி அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். பின்னா், இந்த வழக்கு சென்னை காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்திய தேசிய மாணவா்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை ஐஐடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இதுவரை 5 மாணவா்கள் இதேபோன்று மா்மான முறையில் உயிரிழந்துள்ளனா். தொடா்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, இது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.