குடியுரிமை சட்டம்: தில்லி மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த தமிழக மாணவர்கள்!
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும், தில்லி மாணவர்கள் மீதான தடியடியை கண்டித்தும் கோவை மற்றும் மதுரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல இடங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவா்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதை கண்டித்து லக்னோ உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்திலும் கோவை மற்றும் மதுரையில் பல்வேறு கல்லூரிகளைச்சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தில்லி மாணவர்கள் மீதான தடியடியை கண்டித்தும் மாணவர்கள் சாலையில் போராட்டம் நடத்தினர். இதனால், போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். சிலர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அதேபோன்று சென்னையிலும் எஸ்.எப்.ஐ மாணவ இயக்கத்தினர், சென்னை ஐஐடிமாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறவும், தில்லி மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் கண்டித்து புதுச்சேரி பல்கலை. மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் தொடர் போராட்டத்தினால் தமிழகத்திலும் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.