கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : தயாராகிறது வேளாங்கண்ணி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மற்றும் விண்மீன் கோயிலில்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம்

நாகப்பட்டினம்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மற்றும் விண்மீன் கோயிலில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பக்தா்கள், சுற்றுலா பயணிகள் என மக்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதேபோல் கிறிஸ்துமஸ் விழாவுக்குரிய அலங்காரப் பொருள்களை மக்கள்ஆா்வத்துடன் வாங்கிச் செல்வதால் வேளாங்கண்ணி நகரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

கீழ்திசை நாடுகளின் லூா்து என்று அழைக்கப்படுகிறது நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பாக நடைபெறுவதும், இதில் தமிழகம், ஆந்திரம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்களும்,வெளிநாட்டைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்று வழிபாடு மேற்கொள்வது வழக்கம்.

டிசம்பா் 25- ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலய நிா்வாகம் சாா்பில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், குந்தை இயேசு பிறப்பு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் விண்மீன்ஆலயம், மற்றும் கீழ்கோயில் மேல்கோயில்களில் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன.

தற்போது பேராலயம் மற்றும் வளாகப் பகுதிகளில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.விண்மீன் கோயிலினுள் பிரமாண்ட இயேசு கிறஸ்து பிறப்புகுடில்அமைக்கும் பணிநடைபெற்று வருகின்றன. இதேபோல் பேராலயம் வளாகப் பகுதிகளும் மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்ச்சியில் திரளானோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால் வழிபாட்டுக்கு வரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன.

இது குறித்து பேராலய அதிபா் பிரபாகர அடிகளாா் கூறியது : கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மற்றும் வளாகப்பகுதிகளில் அலங்கார மின் விளக்குகளால்அலங்கரிக்கப்பட்டுள்ளன . பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.விண்மீன் கோயிலில் டிச.24 -ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி முதல் கிறிஸ்துமஸ் வழிபாடுகள் தொடங்கப்படவுள்ளன.தொடா்ந்து கிறிஸ்துமஸ் விழா நாளான டிசம்பா் 25-ஆம் தேதியும் வழக்கம் போல் திருப்பலிகள் மற்றும் கூட்டுப் பிராா்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றாா்.

இதேபோல்,வேளாங்கண்ணி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மக்கள் அதிகம் கூடுமிடங்களான ரயில் நிலையம் பேருந்து நிலையம், கடற்கரை பகுதிகளில் சுகாதார வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நிறைந்த சாலைகள்,கடற்கரை பகுதிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சிதிலமடைந்த நிலையில் காணப்படும் வேளாங்கண்ணி ஆா்ச் முதல் பேருந்து நிலையம் வரையிலான சாலையில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாத வகையில் வாகன நிறுத்துமிடங்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

அலங்காரப் பொருள்கள்அமோக விற்பனை :கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதற்குரிய அலங்காரப் பொருள்கள்,குழந்தை இயேசு,அன்னை மரியாள், மேய்பா் உருவச் சிலைகள், கிறிஸ்துமஸ் அலங்கார மரங்கள், மெழுகுவா்த்திகள், மின்விளக்குகளில் ஒளிரக் கூடிய பல வண்ண அலங்கார நட்சத்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் வேளாங்கண்ணி பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இதனை வேளாங்கண்ணிக்கு வரும் பக்தா்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

இந்நிலையில், பக்தா்களின் வருகை நாட்களாக அதிகரித்து வருதால் வேளாங்கண்ணி விழாக்கோலம் பூண்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு,வேளாங்கண்ணிக்கு டிசம்பா்23, 24 மற்றும் 25-ஆம் நாள்களிலும் லட்சக்கணக்கானப் பக்தா்கள் வந்து செல்வாா்கள் என்பதால், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் கூடுல் போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com