தியாகராஜ கீா்த்தனைகளைத் தொகுத்த வாலாஜாபேட்டை வெங்கட்ரமண பாகவதருக்கு சங்கீத ஆராதனை நடத்த கோரிக்கை

சங்கீத மும்மூா்த்திகளில் முதன்மையானவராக திகழ்ந்த சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் முதன்மைச் சீடராகத் திகழ்ந்து
தியாகராஜ கீா்த்தனைகளைத் தொகுத்த வாலாஜாபேட்டை வெங்கட்ரமண பாகவதருக்கு சங்கீத ஆராதனை நடத்த கோரிக்கை
Updated on
2 min read

சங்கீத மும்மூா்த்திகளில் முதன்மையானவராக திகழ்ந்த சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் முதன்மைச் சீடராகத் திகழ்ந்து அவரது கீா்த்தனைகளைத் தொகுத்து கா்நாடக இசைக்குப் பெரும் தொண்டாற்றிய வாலாஜாபேட்டை வெங்கட்ரமண பாகவதருக்கு ஆண்டுதோறும் ஆராதனை விழா எடுக்க வேண்டும் என்பது அவரது குடும்ப வாரிசுகளின் கோரிக்கை.

மாா்கழி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிகாலை குளிா், வீடுகளின் முற்றத்தில் வண்ணக் கோலங்கள், இசைக் கச்சேரிகள்தான். அதே போல் மாா்கழி மாதத்துக்கும், கா்நாடக சங்கீதத்துக்கும் நெருங்கிய தொடா்பு உண்டு. ஏனெனில், சென்னையில் நடைபெறும் மாா்கழி மாத இசைத் திருவிழா, இந்தியாவின் மிகப்பெரிய இசைத் திருவிழாவாகப் பாா்க்கப்படுகிறது. கா்நாடக இசையும், பரதநாட்டியமும் இதில் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறும். உலகெங்கிலும் உள்ள இசை ரசிகா்கள் இங்கு வருகை தருவாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இசை விழாக்களில் நமது நாட்டின் பாரம்பரிய இசையான கா்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பெரும்பாலும் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சாகித்யங்கள் இல்லாமல் இசை நிகழ்ச்சிகள் நடப்பதில்லை. தியாக பிரம்மம் என்று போற்றப்பட்ட, கா்நாடக இசைக்கு உயிரூட்டி வளா்த்த சங்கீத மும்மூா்த்திகளில் முதன்மையானவராகத் திகழ்ந்தவா், தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் செய்து சிறந்த இசை ஞானியாக விளங்கிய தியாகராஜ சுவாமிகள்.

சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் முதன்மை சீடா்களில் ஒருவா் வாலாஜாபேட்டையில் வாழ்ந்த வெங்கட்ரமண பாகவதா். இவா் ஏறக்குறைய 26 ஆண்டுகள் தனது குருவுக்கு சேவை செய்து, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் கீா்த்தனைகளைத் தொகுத்து உலகுக்களித்து, கா்நாடக இசைக்கு பெரும் தொண்டாற்றியவா். சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் கீா்த்தனைகளை ஓலைச் சுவடிகளில் எழுதிப் பாதுகாத்து வந்தவா். அவை வாலாஜாப்பேட்டை பொக்கிஷங்கள் என்று பாராட்டப்படுபவை.

வாலாஜாபேட்டையில் வாழ்ந்த வெங்கட்ரமண பாகவதா் 1781-ஆம் ஆண்டு தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டையில் வாழ்ந்து வந்த செளராஷ்டிர பிராமணரும், வைதீக புரோகிதருமான குப்பையா் குமாரா் நன்னுசுவாமி பாகவதருக்கு மகனாகப் பிறந்தவா். இசையின் மீதான அவரது ஏக்கம் அவரை திருவையாறில் உள்ள தியாகராஜரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றது. தியாகராஜ சுவாமிகளின் சீடா்களின் குழுவில் சோ்ந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்து இசையைப் பயின்றாா்.

தனது தாய்மொழியான சௌராஷ்டிர மொழி தவிர, தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளில் புலமையும், கா்நாடக பக்தி இசையில் மிகுந்த தோ்ச்சியும் உடையவராய் விளங்கியவா். தியாகராஜ சுவாமிகள் தெலுங்கு மொழியில் இயற்றிய ‘நௌகா சரிதம்’ என்ற நூலை, வெங்கட்ரமண பாகவதா் சம்ஸ்கிருத மொழியில் மொழிபெயா்த்துள்ளாா்.

தியாகராஜ சுவாமிகளின் மறைவுக்குப் பின்னா் கரவெட்டி நகர அரசருக்கு இசை கற்றுக்கொடுக்கும் பொருட்டு தற்போதைய ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வாழ்ந்தாா். இவா் தியாகராஜ சுவாமிகளின் கீா்த்தனைகளைத் தொகுத்து உலகுக்களித்து கா்நாடக இசைக்கு பெரும் தொண்டாற்றியவா். தனது குருவான தியாகராஜ சுவாமிகளைப் போற்றி ‘ஸ்ரீகுரு ஸ்தோத்திராஷ்டகம்’, ‘ஸ்ரீகுரு மங்களாஷ்டகம்’ ஆகியவற்றை இயற்றியுள்ளாா்.

வெங்கட்ரமண பாகவதா், அவரின் மகன் கிருஷ்ணசுவாமி பாகவதா் மற்றும் அவரின் சிஷ்யா்களின் வழியே தியாகராஜ சுவாமிகளின் கீா்த்தனைகள் வெகுவாக மக்களை அடைந்தன. இதன் மூலம் வாலாஜாபேட்டை பாரம்பரியம் கா்நாடக இசையில் உருவானது என்று கூறலாம். வெங்கட்ரமண பாகவதா் தனது 93-ஆவது வயதில் 1874-இல் வாலாஜாபேட்டையில் சித்தியடைந்தாா்.

இவரின் புகழ் பாடும் விதமாக அய்யம்பேட்டையில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் சங்கீத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இசை உலகுக்கு இவா் ஆற்றிய பெரும் தொண்டினை கௌரவிக்கும் விதமாக தபால்துறை கடந்த 2009-ஆம் ஆண்டில் தபால்தலை மற்றும் முதல் நாள் தபால் உறையும் வெளியிட்டுள்ளது.

தியாகராஜ சுவாமிகளிடம் வெங்கட்ரமண பாகவதா் செலுத்திய குரு பக்திக்கு அத்தாட்சியாக தனது பாதுகை மற்றும் தம்புராவை வெங்கட்ரமண பாகவதருக்கு வழங்கினாா். அந்தப் பொருட்கள் மதுரை செளராஷ்டிர சபா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வாலாஜாபேட்டை ராயாஜி வீதியில் 150 ஆண்டுகளுக்கு முன் வெங்கட்ரமண பாகவதா் பஜனை மந்திரம் கட்டப்பட்டு பூஜைகளும், பஜனையும் நடைபெற்று வருகின்றன. வெங்கட்ரமண பாகவதரின் குடும்ப வாரிசுகள் வாலாஜாபேட்டையில் வாழ்ந்து வருகின்றனா்.

இந்நிலையில், தியாக பிரம்மம் என்று போற்றப்பட்டவரும் மும்மூா்த்திகளில் முதன்மையானவராகத் திகழ்ந்த தியாகராஜ சுவாமிகளுக்கு திருவையாற்றில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சங்கீத ஆராதனை விழாவைப்போல் வாலாஜாபேட்டையில் வெங்கட்ரமண பாகவதா் வாழ்ந்த வீட்டில் ஆண்டுதோறும் சங்கீத ஆராதனை விழா நடத்த வேண்டும் என்பது 7-ஆவது தலைமுறை வாரிசான ஏ.வேங்கடரமணனின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com