உளுந்து, துவரை கொள்முதல் விலை உயர்வு!: விவசாயிகள் மகிழ்ச்சி

அரசு சார்பில் முதல் முறையாக பயறு வகைகள் கொள்முதல் மையம் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், வெளிச் சந்தையிலும் வியாபாரிகள் கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தியதால்
திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை கொள்முதல் செய்யப்பட்ட உளுந்து.
திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை கொள்முதல் செய்யப்பட்ட உளுந்து.
Updated on
2 min read

அரசு சார்பில் முதல் முறையாக பயறு வகைகள் கொள்முதல் மையம் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், வெளிச் சந்தையிலும் வியாபாரிகள் கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு அதிகபட்ச விலை கிடைக்கும் வகையிலும், இடைதரகர்களின் தலையீடு இல்லாமல் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்கு வசதியாகவும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் தொடங்கப்பட்டன. தமிழகத்தை பொருத்தவரை 278 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள், விளைப் பொருள்களை சேமித்து வைக்கும் இடமாகவும், ஈட்டுக் கடன் பெறவும், வியாபாரிகள் வந்து ஏலத்தில் விளைப் பொருள்களை கொள்முதல் செய்யவும் பயன்பட்டு வந்தன. 
இந்நிலையில், மத்திய அரசின் விலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 2018-19ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு  விலையில் உளுந்து, பச்சைப்பயறு மற்றும் துவரை போன்ற பயறுவகைகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது.
58,425 மெட்ரிக் டன் உளுந்து, 16,900 மெட்ரிக் டன் பச்சைப்பயறு மற்றும் 10,000 மெட்ரிக் டன் துவரை ஆகியவற்றை கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்தது. உளுந்து கிலோவுக்கு ரூ.56, பச்சைப்பயறு கிலோவுக்கு ரூ.69.75, துவரை கிலோவுக்கு ரூ.56.75 என்ற விலையிலும் கொள்முதல் செய்யப்படும் என கடந்த 10 நாள்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. 
அரசு சார்பில் கொள்முதல் மையம் தொடங்கப்படும் என்ற அறிவிப்புக்கு முன்பு வரை, வெளிசந்தையில் உளுந்து கிலோ ரூ.38 முதல் ரூ.40 வரையிலும், துவரை கிலோ ரூ.42 முதல் ரூ.50 வரையிலும் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. 
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (பிப்.1) அரசு கொள்முதல் மையம் செயல்பாட்டிற்கு வருவதை அறிந்த வியாபாரிகள், வெளிச் சந்தையிலும் கொள்முதல் விலையை உயர்த்தினர். அதன்படி, உளுந்து கிலோ ரூ.53, துவரை கிலோ ரூ.58 என வெளிச் சந்தையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல், பிற பயிர்களுக்கும் கொள்முதல் மையங்கள் தொடங்கி, விளைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த விவசாயிகள் தங்கம், ஆறுமுகம் ஆகியோர் கூறியது: 
அரசு கொள்முதல் மையம் தொடங்கியவுடன், வெளிச் சந்தையில் உளுந்து மற்றும் துவரையின் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. இதேபோல், நிலக்கடலை, மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி மற்றும் எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட பிற விளைபொருள்களையும் அரசு கொள்முதல் செய்வதாக அறிவித்தால், இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து நஷ்டமடைவதிலிருந்து விவசாயிகள் தப்ப முடியும்.
இடுபொருள்கள் விலை உயர்வு, வேலை ஆள்கள் கூலி உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை என பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில், உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு, அனைத்து வகையான உணவு தானியம் மற்றும் பயறு வகைப் பயிர்களுக்கு அரசு சார்பில் இதுபோன்ற கொள்முதல் மையங்களை தொடங்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com