மேக்கேதாட்டு விவகாரம்: ஆதரவு திரட்டும் கர்நாடகம்; மெத்தனத்தில் தமிழகம்!

மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் ஊடகங்களை வளைத்துப்போட்டு ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் கர்நாடகம் ஈடுபட்டுக் கொண்டிருக்க, தமிழகம்  மெத்தனத்தில்
மேக்கேதாட்டு விவகாரம்: ஆதரவு திரட்டும் கர்நாடகம்; மெத்தனத்தில் தமிழகம்!



மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் ஊடகங்களை வளைத்துப்போட்டு ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் கர்நாடகம் ஈடுபட்டுக் கொண்டிருக்க, தமிழகம்  மெத்தனத்தில் இருந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
காவிரி நீர்ப் பகிர்வில் கர்நாடகம்,  தமிழக மாநிலங்களிடையே, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பனிப் போர் நீடித்து வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே 1924-இல் கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டி முடிக்கப்பட்டது. அந்த ஆண்டில் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு செய்துகொள்ளப்பட்டது.  ஆனால்,  ஒப்பந்தம் முடிவடையும் முன் காவிரியின் குறுக்கே மேலும் பல அணைகளைக் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளில்  கர்நாடக அரசு ஈடுபட்டது. 
1974-இல் ஒப்பந்தம் முடிவடைந்ததும், தண்ணீர் தர கர்நாடகம் மறுத்த நிலையில்தான் நிலைமையின் தீவிரத்தை தமிழகம் உணரத் தொடங்கியது.  ஆனால், பிரச்னைக்கு இன்று வரை சரியான தீர்வு கிடைக்காமல் தமிழகம் தவிப்பில் இருந்து வருகிறது.  தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டதால்,  காவிரி ஆற்று நீரை அணை போட்டுத் தடுக்க கர்நாடகம் முடிவெடுத்து செயல்படத் தொடங்கியது.  அதன் விளைவாக, 1974-இல் கபினி அணை, 1982-இல் ஹாரங்கி அணை, 1983-இல் ஹேமாவதி அணை போன்றவற்றை கர்நாடக அரசு கட்டிமுடித்துவிட்டது.  இதைத் தொடர்ந்து,  நீர்ப் பாசனப் பரப்பளவையும் விரிவுபடுத்திக் கொண்டது.
இதனிடையே, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007-இல் வெளியானது.  இதையடுத்து, தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டியது போக,  கூடுதலாக கிடைக்கும் உபரி நீரைப்  பயன்படுத்திக் கொள்வதற்கு சட்டத் தடை எதுவுமில்லாததை உணர்ந்த கர்நாடகம்,  காவிரியின் குறுக்கே மேலும் ஓர்  அணையைக் கட்ட முடிவு செய்தது. இதற்காக 1980-களில் யோசிக்கப்பட்ட மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை கர்நாடகம் கையில் எடுத்தது. 
 2013-இல் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்ததும்,  மேக்கேதாட்டு அணை திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அடிப்படைப் பணிகளில் இறங்கியது. இத் திட்டத்திற்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். இவற்றை பொருள்படுத்தாத கர்நாடக அரசு,  சாத்தியக்கூறு அறிக்கையைத் தயார் செய்து மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததுடன்,  2017-இல் பிப்ரவரியில் அமைச்சரவையில் கொள்கை ரீதியான ஒப்புதலையும்  பெற்றது. ரூ.5,912 கோடி மதிப்பீட்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள மேக்கேதாட்டு அணைத் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கையை  மத்திய நீர் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. 
இதைத் தொடர்ந்து,  விரிவான வரைவுத் திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி அளித்தது.   இந்த விரிவான வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடக அரசு தற்போது அளித்துள்ளது.  இதைத் தொடர்ந்து, மேக்கேதாட்டு அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 
இந்த விவகாரம்  உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்தபோதிலும்,  மேக்கேதாட்டு அணை தொடர்பான சாதகமான அம்சங்களைக்கூறி மக்கள் ஆதரவைத் திரட்டும் நோக்கில்,  ஊடகங்களை மனம் குளிரவைக்கும் வேலையில் கர்நாடக அரசு தற்போது மும்முரம் காட்டியுள்ளது.
 கடந்த  டிச.7,  8 தேதிகளில் கர்நாடகத்தைச் சேர்ந்த கன்னடம்,  ஆங்கிலம்,  தமிழ்,  மலையாளம்,  தெலுங்கு  நாளிதழ்களின் பிரதிநிதிகளை மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பகுதிக்கு அழைத்துச் சென்று, தங்கள் பக்கம் நியாயம் உள்ளதாகக் கர்நாடக அரசு கூறியது.  கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஏற்பாட்டில் நடந்த இந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. 
கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் அனைத்து ஊடகங்களும், மேக்கேதாட்டு அணை கர்நாடகத்திற்கு மட்டுமல்லாது, தமிழகத்திற்கும் பயன் அளிக்கக்கூடியது;  எனவே, இப் பிரச்னையை தமிழக அரசு எதிர்ப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று எழுதத் தொடங்கின.
இது மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு கர்நாடக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.  இந்த வியூகத்தை தேசிய அளவில் விரிவுபடுத்த, கர்நாடக அரசு தீர்மானித்து வருவதாக இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வரும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதற்காக,  தில்லியில் உள்ள ஆங்கிலம்,   தமிழ்,  கன்னட மொழி நாளிதழ்களின்  பிரதிநிதிகளை வியாழக்கிழமை பெங்களூருக்கு அழைத்து வந்துள்ள கர்நாடக அரசு,  வெள்ளிக்கிழமை அனைவரையும் மேக்கேதாட்டுக்கு அழைத்துச் சென்று தனது நிலைப்பாட்டை மேலும் வலுவாக நியாயப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
இதுபோன்ற பணிகளுக்காக லட்சக்கணக்கான ரூபாயை கர்நாடக அரசு தொடர்ந்து செலவழித்து வரும்  நிலையில்,   இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில்  தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் மெத்தனத்துடன் இருந்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள தமிழக அரசு தனது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறதோ என்ற அச்சப்பாட்டையும் தமிழக எதிர்க்கட்சிகள் கூறத் தொடங்கியுள்ளன.  மேலும், கர்நாடக அரசின் ஊடகத் தாக்குதலை முறியடிக்கவும் நடவடிக்கை எதையும் எடுக்காமல்  தமிழக அரசு உள்ளது சமூக ஆர்வலர்கள்,  அரசியல் தலைவர்கள் உள்பட பல தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சட்ட ரீதியான போராட்டம் ஒருபக்கம் இருக்க,  ஊடகத்தின் வாயிலாக மக்கள் செல்வாக்கைப் பெற கர்நாடக அரசு எடுக்கும் முயற்சியை முறியடிக்க இப்போதாவது விழித்துக்கொண்டு தமிழக அரசு ஏதாவது செய்யுமா?  அல்லது எப்போதும் போல கர்நாடக அரசு விரிக்கும் வஞ்சக வலையில் சிக்கித் தவிக்குமா?  என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்கின்றனர் கர்நாடகத்தின் சூட்சமத்தை அறிந்தவர்கள்...!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com