கருணாநிதியின் சாதனைகள் என்றும் நிலைத்திருக்கும்: முதல்வர், துணை முதல்வர் புகழாரம்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகள் இந்த மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் புகழாரம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்காக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட இரங்கல் தீர்மானத்தின் மீது உரையாற்றிய தமிழக முதல்வர்
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்காக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட இரங்கல் தீர்மானத்தின் மீது உரையாற்றிய தமிழக முதல்வர்
Published on
Updated on
2 min read


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகள் இந்த மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் புகழாரம் சூட்டினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது:
முன்னாள் முதல்வரும், இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும், 50 ஆண்டுகளாக திமுகவின் தலைவருமான கருணாநிதியின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அரசியலில் தனிமுத்திரை பதித்தவர்: 1957-ஆம் ஆண்டு முதல்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த கருணாநிதி, 13 முறை சட்டப்பேரவைக்கும் ஒரு முறை சட்ட மேலவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றியவர். 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். 
அரசியல் மட்டுமின்றி இலக்கியம், திரைப்படங்களில் திரைக்கதை, வசனம் போன்ற துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை என எல்லா இலக்கியத் தளங்களிலும் தனி முத்திரை பதித்தவர்.
தமிழக அரசியல் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் தனது முத்திரையைப் பதித்தவர். 
முதல்வராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பாராட்டத்தக்க அளவில் பணியாற்றியவர். அவர் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட சில திட்டங்களையும், இயற்றப்பட்ட சில சட்டங்களையும் மக்கள் நலன் கருதி அதிமுக சார்பில் ஏற்றிருக்கிறோம். அதேசமயத்தில், கொள்கை ரீதியில் மாறுபாடு இருந்தால் அதை எதிர்த்திருக்கிறோம்.
கருணாநிதியின் அரசியல் வாழ்க்கைக்கு அவரிடமிருந்த பன்முக ஆற்றல் காரணமாக அமைந்தது. இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு முதல் தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி வரை அனைத்து பிரதமர்களையும் கண்ட பெருமை அவருக்கு உண்டு.
ஒருவர் பிறக்கிறார். வாழ்கிறார். மறைகிறார். அந்த இடைப்பட்ட காலத்திலேயே செய்த சாதனை என்றைக்கும் இந்த மண்ணிலே நிலைத்திருக்கும். அந்த வகையில் கருணாநிதி செய்த சாதனைகள் இந்த மண்ணில் நிலைத்திருக்கும் என்றார். 
கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர்கள் இல்லை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்... 95 ஆண்டுகள் வாழ்ந்து, தான் பிறந்த நாட்டுக்காகவும், தான் சார்ந்த கட்சிக்காகவும் அயராது உழைத்த கருணாநிதி இன்று நம்மிடையே இல்லை.
மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் தன்னகத்தே கொண்டு விளங்கிய தலைவர் அவர். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், தமிழ்ப் பற்றாளர், பத்திரிகையாளர் என பன்முகம் கொண்ட ஆற்றலாளர். திரைப்படத் துறையில் கோலோச்சியவர். பேச்சாற்றல் மூலம் தனது கட்சித் தொண்டர்களை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திழுக்கக்கூடிய வல்லமை பெற்றவர். 
அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர்களும், அவருடைய அழகு தமிழுக்கு ஆட்பட்டவர்களாக விளங்கினார்.
75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர். 15 நாவல்களையும், 20 நாடகங்களையும் படைத்தவர். 15 சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட கவிதைகளையும் படைத்தவர். உடன்பிறப்பே என்ற தலைப்பில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மடல்கள் தீட்டியவர்.
கருணாநிதியிடம் அரசியல் ரீதியாக எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இரண்டு தலைவர்களுமே கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவராக நான் இருந்தபோது, என்னை அவர் பச்சைத் தமிழர் என்று கூறியது என் நினைவில் இன்றும் உள்ளது.
சுதந்திரதினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி. அவருடைய இழப்பு அனைவருக்கும் பேரிழப்பாகும் என்றார்.
பேரவைத் தலைவர் ப.தனபால் பேசியது: 1977-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பேரவைக்கு வந்ததில் இருந்து, கருணாநிதியை அருகில் இருந்து அவருடைய தமிழைக் கேட்கும் பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. பேரவையில் விவாதம் நடக்கையில் சிறப்பாக உரையாற்றுவார். திரைப்படத்துறை, இலக்கியம், அரசியல் என முத்துறையிலும் சிறப்பாகப் பணியாற்றியவர். கலைஞர் என அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டவர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என்றார்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவுக்கும் பேரவைத் தலைவர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com