

வாணியம்பாடியில் நடைபெறும் காட்டன், லாட்டரி சூதாட்டத்தால் ஏராளமான அப்பாவி ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்து வந்த வெளிமாநில லாட்டரிகள், மூன்று நம்பர், இரண்டு நம்பர் காட்டன் சீட்டுகளுக்கு கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்வது தமிழக அரசால் தடை செய்யப்பட்டது. ஆயினும் கள்ளத்தனமாக வெளிமாநில லாட்டரிகள், காட்டன் எனும் மட்கா சீட்டுகள் தற்போதும் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத், கச்சேரிசாலை, மேட்டுப்பாளையம், கோணாமேடு, உதயேந்திரம், சி.வி.பட்டரை உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிசிக் கடை, டீக்கடை, பூக்கடை, பங்க் கடை மற்றும் திறந்தவெளியில் சாலை ஓரங்களில் சூதாட்டம் நடைபெறுகிறது.
காட்டன் சீட்டு நடத்தும் ஏஜெண்டுகள் நியமித்துள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மூலம் இந்த இடங்களில் தினந்தோறும் காலை 8 முதல் மாலை 3 மணி வரை காட்டன், மூன்று, இரண்டு சீட்டு சூதாட்டம் களை கட்டுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் காட்டன், மூணு சீட்டு சூதாட்ட மதிப்பு ரூ.5, ரூ.70, ரூ.1000 என்று லட்சக்கணக்கிலும், இரண்டு சீட்டுகள் ரூ.10, ரூ.20, ரூ.30 எனத் தொடங்கி ரூ. 1,000 வரையிலும் எழுதப்படுகின்றன. இவ்வாறு ஏதாவது ஒரு எண்ணை வைத்து சூதாடும்போது ஆயிரம் பேரில் 3 பேருக்கு மட்டுமே பரிசுகள் விழும்.
இந்த காட்டன் சூதாட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், தினசரி கூலி வேலை செய்பவர்கள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் என வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிக்கி தங்கள் உழைப்பில் வந்த கூலியை வைத்து சூதாடி விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பும் நிலை தொடர்கிறது. மேலும் காட்டன் வைத்து விளையாட பணம் இல்லாதவர்கள் வீட்டில் உள்ள நகைகள், பொருள்களை வைத்து அதிக வட்டிக்கு கடன் வாங்கி விளையாடுவதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
காட்டன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டிய காவல்துறையினர், பெயருக்கு சிலரைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்வதோடு தங்கள் பணியை சுருக்கிக் கொள்கின்றனர்.
மாவட்ட நிர்வாகமும், காவல்துறை தலைமையும் இணைந்து இதுபோன்ற சமூக விரோதிகளை தயவு தாட்சண்யமின்றி ஒடுக்கக் கூடிய காவல் துறை அதிகாரிகளை வாணியம்பாடியில் பணியில் நியமித்து, காட்டன் சூதாட்டம் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும், சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.