

நத்தம் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை முறைப்படுத்தி பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி எழுப்பிய தமிமுன் அன்சாரி (நாகப்பட்டினம்), கஜா புயலால் பாதித்த வீடுகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் கீதாஜீவன், அரவிந்த் ரமேஷ்
ஆகியோரும் கேள்விகள் எழுப்பினர். இதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பதில்:
கஜா புயலால் பாதித்த பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீட்பு, மறுவாழ்வு ஆகிய பணிகளுடன் இப்போது மறுகட்டமைப்புப் பணிகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. நாகப்பட்டினத்தில் மறுகட்டமைப்புப் பணிகளுக்காக நிலங்களை எடுக்கும்போது, அதில் பல கோயில் நிலங்களாக உள்ளன. எனவே, அதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் ஒப்புதலைப் பெற்று அந்த நிலங்களைப் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கு உதவ வேண்டுமென பிரதமரிடம் அளித்த மனுவில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்டாக்கள்: புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பல்வேறு நிகழ்வுகளின் அடிப்படையில் பட்டாக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. நத்தம் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை முறைப்படுத்தி பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அரசு சார்பில் இரண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இந்த உத்தரவுகளைச் செயல்படுத்த முடியாத நிலை இருந்தது. இப்போது அந்த உத்தரவுகளின் அடிப்படையில் குடியிருப்புகள் முறைப்படுத்தப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.