

அரசு நிலத்தை ஆக்கிரமிப்போருக்கு கடுமையான தண்டனை விதிப்பதற்கான சட்டத் திருத்தம் நிகழாண்டிலேயே கொண்டு வர இருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்தார்.
மேலும், எங்கிருந்தும் இணையவழி பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:-
நில நிர்வாக துறையில் நில எடுப்பு, நில மாற்றம், உரிமை மாற்றம், நிலக் குத்தகை ஆகியன குறித்த நடைமுறைகள் கணினிமயமாக்கி மேம்படுத்தும் திட்டப் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு அந்தத் திட்டத்தை தயார் செய்து செயல்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக இணையதளத்தில் நில மாற்றம் தொடர்பான பிரிவு உருவாக்கப்பட்டு அதனைச் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது. இந்த இணையதளத்தில் மாநிலத்தின் நிலங்கள் தொடர்பான நடைமுறைகள் உருவாக்கப்பட உள்ளன.
நில ஆக்கிரமிப்பை திருத்த குழு: தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம் கடந்த 1905-இல் உருவாக்கப்பட்டது. அரசு நிலங்களைப் பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் அவற்றை அகற்றவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
அரசு நிலங்களில் இப்போது ஏற்படும் ஆக்கிரமிப்பால் உண்டாகும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு நில ஆக்கிரமிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திருத்தங்களைப் பரிந்துரைக்க நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கான திருத்தங்கள் நிகழாண்டிலேயே மேற்கொள்ளப்பட உள்ளன. அரசு நிலங்களில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்வோருக்கு கடுமையான தண்டனை விதிகள் கொண்டு வரப்பட உள்ளன.
பட்டா பெற புதிய வசதி: பொது சேவை மையங்கள் வாயிலாக நில உரிமையாளர்களிடம் இருந்து பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எந்தவொரு இடத்தில் இருந்தும் இணையதளம் வழியாக பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
நில ஆவணங்கள் தொடர்பான இணைய சேவை பயன்பாட்டை பொது மக்களுக்கு விரிவுபடுத்தும் வகையில், நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறைக்கென தனியாக இணையதள வசதி உருவாக்கப்படும். இந்தத் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள், சுற்றறிக்கைகள், அரசாணைகள் போன்ற விவரங்கள் பெற வழி செய்யப்படும்.
கிராம வரைபடங்கள்: தமிழகத்தில் உள்ள 16 ஆயிரத்து 721-க்கும் மேற்பட்ட கிராம வரைபடங்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. அவற்றை தாள் ஒன்றுக்கு ரூ.200 என்ற கட்டணத்தில் இணைய சேவை மையங்கள் மூலமாக பொது மக்கள் பெற்றுக் கொள்ளலாம்.
போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நிலம் தொடர்பான சொத்துகள் பத்திரப் பதிவு செய்யப்படுவதைத் தவிர்க்க பத்திரப் பதிவுக்கு முன்பே உள்பிரிவுகள் பரிசீலனை மற்றும் அங்கீகாரம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
இணையவழி ஒருபக்க விண்ணப்பம்: ஓய்வூதியம் கோரி மனுக்களை சமர்ப்பிக்க வருவாய்த் துறை அலுவலகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேரில் செல்ல வேண்டியுள்ளது.
இதைப் போக்க "இணையவழி விண்ணப்பம்' என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இந்த முறையில் மனுதாரர்கள் தங்களது மனுக்களை அருகிலுள்ள இணைய சேவை அல்லது பொது சேவை மையத்தில் பதிவு செய்யலாம்.
வருவாய்த் துறை தொடர்பான சேவைகளை வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பெற முடியாத நிலை இருந்தது.
இதைக் கருத்தில் கொண்டு வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்களது மனுக்கள், குறைகளைப் பதிவு செய்ய ஏதுவாக தனி இணையதளம் தோற்றுவிக்கப்படும். தமிழகத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களில் 9 ஆயிரத்து 633 பேருக்கு மடிக்கணினிகள் அளிக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.