ஈரோடு மற்றும் கோயம்புத்தூரை இரண்டாக பிரிக்க வேண்டும்: கொ.ம.தே.க வேண்டுகோள்

கொங்கு மண்டலத்தில் உள்ள பெரிய மாவட்டங்களான ஈரோடு மற்றும் கோயம்புத்தூரை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஈரோடு மற்றும் கோயம்புத்தூரை இரண்டாக பிரிக்க வேண்டும்: கொ.ம.தே.க வேண்டுகோள்
Published on
Updated on
1 min read

சென்னை: கொங்கு மண்டலத்தில் உள்ள பெரிய மாவட்டங்களான ஈரோடு மற்றும் கோயம்புத்தூரை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலர் ஈஸ்வரன் வியாழனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியையும், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டையும் தனி மாவட்டங்களாக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. கொங்கு மண்டலத்தில் உள்ள பெரிய மாவட்டங்களான ஈரோடு மற்றும் கோயம்புத்தூரை இரண்டாக பிரிக்க வேண்டுமென்ற அந்த மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தமிழக அரசும், தமிழக முதலமைச்சர் அவர்களும் செவிசாய்க்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.

நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களை எல்லாம் இரண்டாக பிரித்து புதிய மாவட்டங்களாக உருவாக்குவதன் மூலம் அரசு சார்ந்த பணிகளை மக்களுக்கு தமிழக அரசு விரைவாக வழங்க முடியும். கடைநிலையில் உள்ள கிராமத்திற்கு அரசு திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டுமென்றாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் எளிதாக வந்து செல்ல வேண்டுமென்றாலும் பெரிய மாவட்டங்களை இரண்டாக பிரிப்பது மட்டும்தான் ஒரே தீர்வு. பெரிய மாவட்டங்களாக இருப்பதால் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் ஆண்டுக்கணக்கில் தீர்வு எட்டப்படாமல் கிடப்பில் போடப்படுகிறது.

கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கையை வைத்து வருகிறோம். இவ்விரு மாவட்டங்களில் அதிக தொழிற்சாலைகளும் இருக்கிறது. மற்ற மாவட்டங்களை இரண்டாக பிரித்து அறிவிப்பை வெளியிடும் தமிழக முதலமைச்சர் அவர்கள் அதிக மக்கள்தொகையை கொண்ட கோயம்புத்தூர் மாவட்டத்தை பொள்ளாச்சியை தலைமையிடமாகவும், ஈரோடு மாவட்டத்தை கோபிசெட்டிபாளையத்தை தலைமையிடமாகவும் கொண்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்க முன்வர வேண்டும்.

கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழக முதலமைச்சர் அவர்களிடம் இதனை வலியுறுத்த வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com