நவம்பர் 1 -ஆம் தேதி தமிழ்நாடு தினம்: கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி வரவேற்பு 

நவம்பர் 1 -ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்பதாக கொ.ம.தே கட்சி அறிவித்துள்ளது.
நவம்பர் 1 -ஆம் தேதி தமிழ்நாடு தினம்: கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி வரவேற்பு 
Published on
Updated on
1 min read

சென்னை: நவம்பர் 1 -ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்பதாக கொ.ம.தே கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் 1 -ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கின்றோம். பல வருடங்களாக நவம்பர் 1 -ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடி வருகின்ற நாங்கள் தொடர்ந்து அரசுக்கு வைத்து வந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.

தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமே ஒவ்வொரு தமிழனும் ஜாதி, மத வித்தியாசமில்லாமல் அரசியல் வேறுபாடுகளை மறந்து தான் தமிழன் என்ற ஒரே உணர்வு மேலோங்க வேண்டும் என்பதற்காக தான். அரசு கொண்டாட போகின்ற தமிழ்நாடு தினத்திற்கு யார் ஆட்சியில் இருந்தாலும் அனைத்துக்கட்சியினரும், தமிழ் ஆர்வலர்களும் அழைக்கப்பட வேண்டும். அன்றைய தினம் வாகனங்களிலும், வீடுகளிலும் அவரவர் கட்சி கொடிக்கு பதிலாக பொதுவான ஒரு கொடியை கட்ட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டுக்கு என்று தனி கொடி உருவாக்கப்பட வேண்டும்.

மேற்சொன்ன நடவடிக்கைகளை எடுத்து தமிழன் என்ற உணர்வை மேம்படுத்த வேண்டும். தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் தொடர்ந்து காப்பாற்றுவதற்கு இது வழிவகுக்கும். இன்றைய காலகட்டத்தில் தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டங்களுக்கும், தமிழக உரிமைகளை கேட்டு பெறுவதற்கும் அரசியல் ரீதியான எதிர்ப்புகளை எல்லாம் மறந்து தமிழன் என்ற உணர்வோடு மொத்த தமிழர்களும் ஒற்றுமைப்பட வேண்டிய தேவை இருக்கிறது. இந்த நேரத்தில் நவம்பர் 1 தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும்  என்று அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com