
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தின் வனத்தோட்டக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட தைல (யூக்கலிப்டஸ்) மர வளர்ப்புத் திட்டத்தால் கடந்த 10 ஆண்டுகளில் மாவட்டத்தின் இயற்கை வளம் பெருமளவில் அழிந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தோடு புதுக்கோட்டை சமஸ்தானப் பகுதிகள் இருந்திருந்தாலும், தஞ்சைப் பகுதியைப் போல மிகுதியான விவசாய வளத்தைக் கொண்ட பகுதியாகும், ஒரு காலத்தில்! சமஸ்தான ஆட்சிக் காலத்தில் தஞ்சையிலிருந்து நெல்லை இறக்குமதி செய்யக் கூடாது என்ற மன்னர் உத்தரவும் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கம்பு, சாமை, எள், கொள்ளு என செழித்துக் கிடந்தப் பகுதி.
ஏறத்தாழ 85 ஆயிரம் ஏக்கர் காப்புக்காடுகளைக் கொண்டிருந்த மாவட்டம் புதுக்கோட்டை. புதர்க்காடுகளிலும், மரக்காடுகளிலும் மான், மயில், நரி, முள்ளம்பன்றி, குள்ளநரி, குரங்குகள் ஏராளம் இருந்துள்ளன. இரண்டரை லட்சம் ஹெக்டேர் புஞ்சையும், ஒன்றரை லட்சம் ஹெக்டேர் நஞ்சையும் கொண்ட மாவட்டம். இன்றைக்கு விவசாயச் சூழல் மட்டுமல்ல, புதுக்கோட்டையின் வெப்பமும் அதிகரித்திருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள காப்புக்காடுகளில் பெய்யும் மழை நீர் வடிந்து, ஏறத்தாழ 5 ஆயிரம் குளங்களை நிரப்பி பாசனத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இப்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டுக் கிடக்கின்றன.இந்த நிலைக்கு முழுமையான காரணம் தைல மரக்காடுகளே எனக் குற்றம்சாட்டுகிறார் இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஜி.எஸ். தனபதி.
இதுகுறித்து அவர் கூறியது: 1974-இல் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகளில் தைல மரங்களை வளர்க்கும் திட்டத்தை நிறைவேற்றியதுதான் எங்களின் இந்தத் துயருக்குக் காரணம். மற்ற மாவட்டங்களைப் போல, எங்கிருந்தோ ஓடி வரும் நதியில் இருந்தோ, மலையில் இருந்தோ தண்ணீர் எங்களுக்கு வராது. இங்குள்ள காப்புக்காட்டில் பெய்யும் மழைதான் குளங்களில் தேங்கும். ஒரு குளத்தின் உபரி நீர் அடுத்த குளத்துக்குச் செல்லும். வெள்ளாறு, அக்னி ஆறு ஆகியனவும் இவ்வாறான ஏற்பாடுகள்தான். வறட்சியைத் தாங்கி வளரும் எனக் கூறப்படும் தைல மரத்தை வைத்த வனத்துறையினர் அங்கிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியே வராத அளவுக்கு கரைகளைப் போட்டு தடுத்துவிட்டனர். குளங்கள் வறண்டன. நிலத்தின் பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கொடுப்பது எல்லா வகையான மரங்களும், எல்லா வகையான பூச்சிகள், விலங்குகளும்தான். தைல மரம் தன்னுடன் வேறெந்த செடியையும் வளர விடாது என்பது மட்டுமல்ல, ஒரு புழு கூட அந்தத் தோப்பில் வாழ முடியாது. புழு, பாம்பு இல்லாவிட்டால் மயில் இல்லை, பறவைகள் இல்லை. இவை அழிந்ததால் மாவட்டத்தின் மொத்த பல்லுயிர்ப் பெருக்கமும் அழிந்து போனது. காட்டு மாட்டினமே இல்லை, நரி, மான் எல்லாமும் அழிந்தன. பொன்வண்டு என்ற சிறு வண்டினம் கூட அழிந்தது. கழுகுகளைப் பார்க்கவே முடியவில்லை. தற்போது மாநிலத்தின் இரண்டாவது பெரியது என்ற பெருமை கொண்ட அருங்காட்சியகத்தில் இவை உள்ளன, காட்சிப் பொருள்களாக! காற்றிலுள்ள ஈரப்பதத்தையும் தைல மரங்கள் உறிஞ்சிக் கொள்ளும் என்பதால் புதுக்கோட்டையின் வெப்பம் தகிக்கத் தொடங்கிவிட்டது. போதாக்குறைக்கு கஜா புயலால் லட்சக்கணக்கான மரங்களை இழந்து நிற்கிறோம். வேறு வழியே இல்லை, தைல மரங்களை அகற்ற வேண்டும். வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் நிலத்திலும், பணத்தாசை காட்டப்பட்டு ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் தனியார் நிலங்களிலும் இந்தத் தைல மரக்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. காகிதம் தயாரிக்க வெளிநாடுகளில் இருந்து தைலமரக் கூழ் உள்ளிட்டவற்றை குறைந்த விலையில் இறக்குமதி செய்யலாம். சவுக்கு உள்ளிட்ட வேறு மரங்களையும் வளர்க்கலாம். ஆனால் மல்லுக்கட்டிக் கொண்டு தைல மரத்தை வைத்திருக்கிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையை அணுகியிருக்கிறோம். ஆட்சியர், வனத்துறை அலுவலர்களுக்கு நோட்டீஸ் போடப்பட்டுள்ளது. இதனால் நல்ல தீர்வு கிடைக்கும். புதுக்கோட்டை மக்களின் வாழ்வில் வசந்தம் வீசுமென நம்புகிறோம் என்கிறார் தனபதி.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு மனித குலத்தில் உணவுப் பழக்கத்தில் இடம்பெற்றிருந்த, காட்டுப் பழங்கள் என்றழைக்கப்படும் சூரைப்பழம், பாலைப்பழம், ஈச்சம்பழம், இலந்தை, நாவல், நெல்லி, அரை நெல்லி, அத்தி போன்றவை செழித்து வளர்ந்த பகுதிதான் புதுக்கோட்டை. இப்பட்டியலில் உள்ள பலவற்றை காணவே முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, சந்தைகளில் கிடைக்கும் நெல்லி, இலந்தை, அத்தி போன்றவையும் இம்மண்ணில் விளைபவை அல்ல என்பது விவசாயத்துக்கு நேரிட்ட பெருந்துயரமே!
- சா. ஜெயப்பிரகாஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.