இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் உதவிப் பொறியாளர் தேர்வு: மின்சார வாரியத் தலைமைப் பொறியாளர் பதிலளிக்க உத்தரவு

இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றாமல், தமிழக மின் வாரியம் வெளியிட்ட  மின்வாரிய உதவிப் பொறியாளர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின்
இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் உதவிப் பொறியாளர் தேர்வு: மின்சார வாரியத் தலைமைப் பொறியாளர் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read


இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றாமல், தமிழக மின் வாரியம் வெளியிட்ட  மின்வாரிய உதவிப் பொறியாளர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 
புதுக்கோட்டையைச் சேர்ந்த சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனு: 
மின் வாரிய  உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு 2018- ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி  அறிவிப்பாணை வெளியிடப்பட்டு தேர்வு நடைபெற்றது.  உதவிப் பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை முறையாகப் பின்பற்றப்படவில்லை. இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பலர் பொதுப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி பணியிடங்களை நிரப்பக் கோரி மின் வாரியத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, ஏப்ரல் 27-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தபோது எங்களது மனுவைப் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவு நகலுடன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளரைச் சந்தித்து இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை விடுத்தோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இதனால் தகுதியான பலர் தேர்வுப் பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே, எனக்காக ஒரு பணியிடத்தைக் காலியாக வைக்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளர் வெளியிட்ட தேர்வுப் பட்டியலை ரத்து செய்து,  இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி புதிய  தேர்வுப் பட்டியலை வெளியிடவும் உத்தரவிட வேண்டும். அதுவரை தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வுப் பட்டியல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க  இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இதில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படாததோடு, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். 
இதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளர் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், மின் வாரிய உதவிப் பொறியாளர் பணியிடம் தொடர்பான இறுதி முடிவு நீதிமன்ற உத்தரவுக்குள்பட்டது எனத் தெரிவித்தார். மின் வாரிய உதவிப் பொறியாளர் பணியிடத் தேர்வுப் பட்டியலில் உள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com