கடலாடியில் சூரிய மின் உற்பத்தித் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 10 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தித் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கடலாடியில் சூரிய மின் உற்பத்தித் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 10 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தித் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் உள்ள வாலிநோக்கம் உப்பள வளாகத்தில் 50 மெகாவாட் மின்திறன் கொண்ட சூரிய வெப்ப சலன மின் உற்பத்தியுடன் கூடிய கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, அந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் மாரியூரில் டைடல் பார்க் நிறுவனத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள 10 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தித் திட்டத்தை முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். 
இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 1.89 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு டைடல் பார்க் தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும். மேலும், தனது 50 சதவீத மின் தேவையை மரபு சாரா எரிசக்தியான சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் பூர்த்தி செய்வதோடு, ஆண்டுக்கு ரூ.10 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டங்களாக சூரிய வெப்ப சலனம் மின் திட்டம் அமைத்தல் மற்றும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய துணைமின் நிலையங்கள்: தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய துணைமின் நிலையங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். 
அதன்படி, விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர்,  கடலூர் மாவட்டம் நெய்வேலி, திருச்சி மாவட்டம் அதவத்தூர்,  திருப்பூர் இந்திராநகர்,  கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளி,  ராயக்கோட்டை,  மதுரை செக்காணூரணி, திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி,  கோவை மாதம்பட்டி,  திருவண்ணாமலை சேத்பட், வேலூர் விண்ணமங்களம் ஆகிய இடங்களில் புதிய துணைமின் நிலையங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இதேபோன்று, கிருஷ்ணகிரி பண்ணந்தூர், சிகரலப்பள்ளி, கூச்சூர், சின்னார், ஏ.செட்டிப்பள்ளி,  திருச்சி பாலகிருஷ்ணம்பட்டி,  மதுரை அ.சொக்குளம், திருநெல்வேலி திருவேங்கடம்,  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வேலூர் தாமரைப்பாக்கம்,  ஆணைமல்லூர்,  திண்டுக்கல் சின்னலுப்பை, புதுக்கோட்டை அன்னவாசல்,  தருமபுரி மாவட்டம் பைசுஹள்ளி, அனுமந்தபுரம்,  நாகப்பட்டினம்,  காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூர், திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம்,  ஈரோடு மாவட்டம் கரட்டுப்புதூர், புஞ்சைதுறையம்பாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், கடலூர் கொத்தட்டை, புவனகிரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள துணைமின் நிலையங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்தார்.  
அமைச்சர்கள் தங்கமணி,  எம்.சி.சம்பத்,  தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com