தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு: வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை; நான்கு முனைப் போட்டி நிலவுகிறது

 தமிழகத்தில் மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. 
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு: வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை; நான்கு முனைப் போட்டி நிலவுகிறது

தமிழகத்தில் மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. 
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை காலை முதல் நடைபெறவுள்ளது. இதனிடையே, திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன்,  மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதால் தேர்தலில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கை கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அன்றைய தினத்தில் இருந்து வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 26-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது.
இதுவரை எவ்வளவு?: வேட்புமனு தொடங்கிய சில நாள்களில் குறைவான அளவிலேயே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமை அதிகளவு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களில் மட்டும் 600-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கலாகின. அதன்படி, வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு நிலவரப்படி 1,118 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், ஆண்கள் சார்பில் 988 மனுக்களும், பெண்கள் சார்பில் 128 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. 2 திருநங்கைகளும் வேட்புமனுக்களை அளித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி, தேர்தல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை 1,118 ஆக உள்ளது.
இதன் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடைத் தேர்தலில் எத்தனை பேர்: தமிழகத்தில் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலிலும் போட்டியிட சுயேச்சைகள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேட்புமனு தாக்கல் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை வரை 465-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றில், 393 ஆண்கள் பெயரிலும், 72 மனுக்கள் பெண்கள் பெயரிலும் அளிக்கப்பட்டுள்ளன.
நான்கு முனைப் போட்டி: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், மக்களவை, சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் 
பிரதானமாக அதிமுக  தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுகின்றன.  
இதேபோன்று, பரவலாக பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியனவும் தனித்தனியே தேர்தல் களம் காணுகின்றன. இதனால், தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டாலும் அவர்களுக்கு நீதிமன்ற அறிவுறுத்தல்படி பொதுச் சின்னம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த இரு கட்சிகளும் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு பலமான போட்டியை ஏற்படுத்துவார்கள் என்பதால் இந்தத் தேர்தல் நான்கு முனைப் போட்டியாக அமைந்துள்ளது.
தலைவர்கள்-கட்சியினர்: மக்களவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், முன்னணி பிரமுகர்களும் போட்டியிட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதன்படி, கனிமொழி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எச்.ராஜா, திருநாவுக்கரசர், தமிழிசை சௌந்தரராஜன், தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், ஏ.கே.மூர்த்தி, எல்.கே.சுதீஷ், கே.பி.முனுசாமி, பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதா
கிருஷ்ணன், எழுத்தாளர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், சு.வெங்கடேசன், ஜோதிமணி, ரவிக்குமார், மருத்துவர்கள் கலாநிதி வீராசாமி, ஜெ.ஜெயவர்தன், எம்.பி.,க்கள் வேணுகோபால், மு.தம்பிதுரை மற்றும் தங்க தமிழ்ச் செல்வன், பி.பழனியப்பன் என பல கட்சிகளைச் சேர்ந்த முன்னணி பிரமுகர்களும் களத்தில் உள்ளனர்.
இன்று மனுக்கள் பரிசீலனை:  
மக்களவைத் தேர்தலிலும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை (மார்ச் 27) நடைபெறுகிறது. மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு, வேட்புமனுக்களைத் திரும்பப் பெற வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்குப் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஒதுக்கீடு செய்வார்கள். ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஒரு மாதத்துக்கும் மேலான கால இடைவெளிக்குப் பிறகு மே 23-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் காலக்கெடு செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிவடைந்த நிலையில், மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com