Agni Natchathiram
Agni Natchathiram

இதுவரை ட்ரெய்லர்.. இனிதான் மெயின் பிக்சர்! இன்று முதல் 'கத்திரி'

கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை தொடங்கியது. 
Published on

சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மேஷம் எனும் நட்சத்திர மண்டலப் பகுதிகள் வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக உணர்கிறோம். இந்தக் காலகட்டத்தை அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனக் கூறுகிறோம். 

ஆண்டுதோறும் 21 நாள்கள் முதல் 28 நாள்கள் வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த அக்னி நட்சத்திரம்  தொடங்கும் போது முதல் 7 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகும். 21-ஆவது நாளில்  வெயில் உச்சத்தைத் தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் குறையத் தொடங்கும். 

இவ்வாண்டு அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4-ஆம் தேதி தொடங்கி  29-ஆம் தேதி வரை மொத்தம் 26 நாள்கள் நீடிக்கிறது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வேலூரில் உச்சகட்டமாக வியாழக்கிழமை 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. 

கோடைக்காலம் தொடங்கும் முன்பாக பிப்ரவரி இறுதியில் இருந்தே வெயிலின் அளவு அதிகரித்துக் காணப்பட்டது. பல இடங்களில் மார்ச் மாதத்திலேயே 100 டிகிரியை கடந்து வெப்பம் பதிவான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் காணப்பட்டது.

பகலில் கடுமையான அனல் காற்று வீசியதால் மக்கள் வெளியில் நடமாடவும், வாகனங்களில் செல்லவும் கடும் அச்சமடைந்தனர். கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் 112 டிகிரியை கடந்து புதிய உச்சம் தொட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள பகல்நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், பருத்தி ஆடைகளை அணியவும், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிக அளவில் உட்கொள்ளவும் வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com