வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்கள் அடியோடு புறக்கணிப்பு: மு.க. ஸ்டாலின் கண்டனம் 

குரூப் “டி” பிரிவிற்கு ரயில்வே தேர்வு வாரியம் நடத்திய தேர்விலும் நம் மாநில மாணவர்களைப் புறக்கணிக்கும் விதத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக
வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்கள் அடியோடு புறக்கணிப்பு: மு.க. ஸ்டாலின் கண்டனம் 
Published on
Updated on
2 min read

"தமிழகத்தில் வெளி மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு பாஜக மற்றும் அதிமுக அரசுகள் துரோகமிழைத்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக வேலையே கிடைக்காமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் போது, இங்குள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட மாநிலத்தவருக்கு அத்தனை வேலை வாய்ப்புகளையும் வாரி வழங்கிவரும் பச்சை துரோகச் செயலுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனிதநேயமின்றி தட்டிப் பறிக்கும் கொடும் செயல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு - குறிப்பாக கடந்த ஐந்து வருட காலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பல மடங்கு பெருகி விட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.

சமீபத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பயிற்சி (Apprenticeship) பெற நடைபெற்ற தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டு, வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தமிழக இளைஞர் கண்ணில் சுண்ணாம்பைத் தடவும் நிகழ்வாகும். நூற்றுக்கணக்கான தமிழக இளைஞர்கள் அத்தேர்வில் கலந்து கொண்டும், ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை. கோவை, சென்னை உள்ளிட்ட ரயில்வே அலுவலகங்களிலும் இந்த அநீதி நம் மாநில இளைஞர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகிறது. அந்த அலுவலகங்களில் நடைபெற்ற 2600 நியமனங்களில் 2300 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே மத்திய அரசின் தபால் இலாகாவில் உள்ள பணிகளுக்கு நடைபெற்ற தேர்வில் பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்மொழியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற “மெகா முறைகேடு” வெளிச்சத்திற்கு வந்தது. அது தற்போது சிபிஐ விசாரணையில் இருக்கிறது. இப்போது குரூப் “டி” பிரிவிற்கு ரயில்வே தேர்வு வாரியம் நடத்திய தேர்விலும் நம் மாநில மாணவர்களைப் புறக்கணிக்கும் விதத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள், புதிய பணியிடங்கள் எல்லாம் வட மாநிலத்தவருக்கே முழு குத்தகைக்கு விடப்பட்டது போன்ற அவல நிலைமையை மத்தியில் உள்ள பாஜக அரசு திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு உருவாக்கியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை போனதோடு மட்டுமில்லாமல் - பாஜகவுடன் கூட்டணியும் வைத்து தமிழக இளைஞர்களை வஞ்சித்துள்ளார்.

பாஜக மற்றும் அதிமுக தமிழ்நாட்டிற்கு இழைத்துள்ள இந்த  துரோகத்தை அகற்ற திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி பூண்டுள்ளது. அதனால்தான் கழகத்தின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், எல்.ஐ.சி போன்றவற்றில் 90 சதவீதத்திற்கு குறையாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கட்டாயமாக்க வேண்டும்” என்றும், “மத்திய அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகள் தமிழிலும் நடத்தப்பட வேண்டும்” என்றும் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மத்தியில் திராவிட முன்னேற்றக் கழகம் கைகாட்டும் அரசு அமைந்தவுடன், இந்தத் தேர்தல் வாக்குறுதிகள் உறுதியாக நிறைவேற்றப்படும்.

மே-23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான “தமிழக இளைஞர்கள் விரோத” அரசு வீட்டுக்குப் போகும். தமிழகத்தை வேலை வாய்ப்பில் வஞ்சித்த மத்திய பாஜக அரசுக்கும் விடை கொடுக்கப்படும். ஆகவே, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கே 90 சதவீத முன்னுரிமை என்பது உறுதி செய்யப்பட்டு - தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலை வாய்ப்பு பெறுகின்ற நிலையை உருவாக்குவதே திமுக நோக்கம் என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com