சபாநாயகர் தனபால் நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கூடுதல் கால அவகாசம் தேவை: எம்.எல்.ஏ பிரபு மனு

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு மனு அளித்துள்ளார். 
சபாநாயகர் தனபால் நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கூடுதல் கால அவகாசம் தேவை: எம்.எல்.ஏ பிரபு மனு


சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு மனு அளித்துள்ளார். 

அதிமுக கொறடா ராஜேந்திரன் சமீபத்தில் சபாநாயகர் தனபாலிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக எம்எல்ஏக்களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி இருந்தார்.  

இந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 3 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் கடந்த மாதம் 30 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய சில மணி நேரத்தில் திமுக சார்பில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக சட்டசபை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் டிடிவி தினகரனுடன் தொடர்பில் உள்ளதாக கடந்த ஆண்டு அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் தெரிவித்திருந்தார். அதுதொடர்பான ஆதாரம் என்று கூறி சில புகைப்படங்களுடன் மீண்டும் கடந்த மாதம் 26-இல் புகார் மனு அளித்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவர் பி.தனபால், மூன்று எம்எல்ஏக்களிடமும் விளக்கம் கேட்டு கடந்த மாதம் 30-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். 

இந்நிலையில், பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி எம்எல்ஏக்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பான மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் ஆகியோர் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி, பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் நிலுவையில் உள்ளது. இருப்பினும் தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவோமோ என்ற ஐயப்பாடு அவர்களுக்கு (எம்எல்ஏக்களுக்கு) உள்ளது என்றார். 

அப்போது பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, இந்த விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் முடிவு எடுப்பதற்கு முன்பே, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். எனவே, இந்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்றார். 

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் உள்ளதா? என வினவினார். தொடர்ந்து, வாதாடிய முகுல் ரோத்தகி, மூன்று எம்எல்ஏக்களிடமும் விளக்கம் கேட்ட பிறகே, நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து பேரவைச் செயலரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். 

வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மூன்று எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக பேரவைத் தலைவர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்படுகிறது எனத் தெரிவித்தனர். 

இந்நிலையில், சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க ஒருவார கால அவகாசம் தேவை என்று சட்டப்பேரவை செயலர் சீனிவாசனிடம் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு அவகாசம் கேட்டு மனு அளித்துள்ளார். 

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு உச்சநீதிமன்றத்தை நாடாத நிலையில், நோட்டீஸுக்கு அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com