ஆண்டுக்கு ஆண்டு குறையும் மா விளைச்சல்: அரசு உதவியை எதிர்நோக்கும் விவசாயிகள்!

நத்தம் மற்றும் சாணார்பட்டி பகுதிகளில் ஹெக்டேருக்கு 12 டன் மாங்காய்கள் அறுவடை செய்ய வேண்டிய இடங்களில் 7 டன்களுக்கும் குறைவாகவே கிடைத்துள்ளதால்,
ஆண்டுக்கு ஆண்டு குறையும் மா விளைச்சல்: அரசு உதவியை எதிர்நோக்கும் விவசாயிகள்!
Updated on
1 min read

நத்தம் மற்றும் சாணார்பட்டி பகுதிகளில் ஹெக்டேருக்கு 12 டன் மாங்காய்கள் அறுவடை செய்ய வேண்டிய இடங்களில் 7 டன்களுக்கும் குறைவாகவே கிடைத்துள்ளதால், நஷ்டமடைந்துள்ள மா விவசாயிகள் தமிழக அரசின் நிவாரண உதவியை எதிர்நோக்கியுள்ளனர்.
 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் விளையும் மாம்பழம் தமிழகம் மட்டுமின்றி, குஜராத், தில்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இமாம்பஸ்து, காளாப்பாடி, பங்கனபள்ளி (சப்பட்டை), செந்தூரம் (பாலாமணி), கல்லாமை, காசா (நீலம்), சக்கரகுட்டி, குத்தூஸ், சேலம் குண்டு, மல்கோவா, அல்போன்சா, மல்லிகை, நீலிசா உள்ளிட்ட பிரதான மாம்பழ ரகங்கள் நத்தம் பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்றன.
 நத்தம் அடுத்துள்ள பரளி, வத்திப்பட்டி, முளையூர், குட்டூர், செந்துறை, குட்டுப்பட்டி, தவசிமடை, வேம்பார்பட்டி, சாணார்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 13 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி நடைபெற்று வந்தது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், பல பகுதிகளிலும் மா மரங்கள் அழிந்து வருகின்றன.
 கடந்த 3 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மா உற்பத்தி, தொடர்ந்து நிகழாண்டிலும் கடும் சரிவை சந்தித்துள்ளது. பொதுவாக, ஏப்ரல் முதல் வாரத்தில் நத்தம் மாம்பழ சீசன் தொடங்குவது வழக்கம். தற்போது, வறட்சியின் காரணமாக மா மரங்கள் பூக்கும் பருவம் தாமதமானதாலும், மழை இல்லாததாலும் மா விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கூறுகின்றனர்.
 இது தொடர்பாக கோபால்பட்டி அடுத்துள்ள செடிப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் முருகேசன், குமார் ஆகியோர் கூட்டாகக் கூறியது:
 கடந்த சில ஆண்டுகளாகவே மழையின்றி மா விவசாயம் பாதித்துள்ளது. பூக்கும் பருவம் முடிந்து, பிஞ்சு பிடிக்கும் காலங்களில் மழை பெய்தால் மட்டுமே விளைச்சல் அமோகமாக இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த முறையும் மழை இல்லை. இதனால், மா சீசன் தாமதமாக தொடங்கியதோடு, விளைச்சலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
 பத்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மா மரங்களில் ஹெக்டேருக்கு சராசரியாக 12 டன் காய்கள் கிடைக்கும். மழை இல்லாததால், கடந்த ஆண்டு 8 டன் காய்கள் மட்டுமே கிடைத்த நிலையில், இந்தாண்டு ஹெக்டேருக்கு 1 முதல் 2 டன் காய்கள் குறைய வாய்ப்புள்ளது. அதேபோல், 5 முதல் 10 ஆண்டுகளுக்குள்பட்ட மரங்களில் 7 டன்னுக்கு பதிலாக, 5 டன் காய்கள் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது.
 மூன்று முறை மருந்து தெளிப்பு, களை (தூர்) வெட்டுதல், பறிப்பு கூலி என செலவிட்டுள்ள நிலையில், 3 மாதங்களுக்கு மேலாக மா விவசாயத்தை மட்டுமே நம்பி வந்த விவசாயிகளுக்கு இந்த முறை பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பெரும் இழப்பை சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு உதவும் வகையில், தமிழக அரசு நிவாரணம் வழங்கவேண்டும் எனத் தெரிவித்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com