பொள்ளாச்சி திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய நபரான திருநாவுக்கரசுவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 4 பேர் செவ்வாய்க்கிழமை விசாரணையில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி சின்னப்பம்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணையில் ஈடுபட்ட சி.பி.ஐ. அதிகாரிகள்.
பொள்ளாச்சி சின்னப்பம்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணையில் ஈடுபட்ட சி.பி.ஐ. அதிகாரிகள்.
Updated on
1 min read


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய நபரான திருநாவுக்கரசுவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 4 பேர் செவ்வாய்க்கிழமை விசாரணையில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து  போலீஸார் வழக்குப் பதிவு செய்து  திருநாவுக்கரசு (27), சபரி (எ) ரிஷ்வந்த் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (24)  ஆகியோரைக் கைது செய்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி அதிகாரிகள் பொள்ளாச்சியில் உள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரின் வீடுகளில் சோதனை நடத்தியதோடு அவர்களின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.
 இதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீஸாரிடமும் விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 27-ஆம் தேதி சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சியில் தங்கி, இந்த வழக்கு தொடர்புடைய  பல்வேறு இடங்களில் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட காலகட்டத்தில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் பெயர்ப் பட்டியலை பெற்றுச் சென்றனர். இந்த நிலையில், பொள்ளாச்சி, சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு வீட்டுக்குச் சென்ற சிபிஐ ஆய்வாளர் கருணாநிதி தலைமையிலான அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் வீட்டைத் திறந்து செவ்வாய்கிழமை மாலை ஆய்வு செய்தனர். 
 வீட்டின் பரப்பளவு, கிராம ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டின் விவரங்கள், வீட்டில் திருநாவுக்கரசு குடும்பத்தினர் எத்தனை ஆண்டுகளாக வசித்து வந்தார்கள் என்பன உள்ளிட்ட  பல்வேறு தகவல்களைச் சேகரித்த அவர்கள், அருகில் வசித்து வருபவர்களிடம் அவர்களது பெயர், கதவு எண், வீட்டு முகவரி திருநாவுக்கரசு வீட்டில் ஏதேனும் சட்ட விரோதச் சம்பவங்கள் நடைபெற்றதைப் பார்த்தனரா என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணையில் ஈடுபட்டனர். பெண் அதிகாரி ஒருவர் அங்கிருந்த பெண்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com