‘விழுவதல்ல தோல்வி, வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி’: தொண்டர்களை உற்சாகப்படுத்தும் ராமதாஸ் 

‘விழுவதல்ல தோல்வி. வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி’ என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
‘விழுவதல்ல தோல்வி, வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி’: தொண்டர்களை உற்சாகப்படுத்தும் ராமதாஸ் 

சென்னை: ‘விழுவதல்ல தோல்வி. வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி’ என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்துள்ள நிலையில், அதை திமுகவும், மற்றக் கட்சிகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டதாகவும், இனி அக்கட்சியால் எழ முடியாது என்றும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற உண்மையை அறியாதது தான் அக்கூட்டம்.

தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி 7 இடங்களில் போட்டியிட்டது. அந்தத் தொகுதிகளில் மொத்தம் 23 லட்சம் வாக்குகளை பா.ம.க. பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பா.ம.க வாங்கிய வாக்குகளின் விழுக்காடு 5.40 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் பா.ம.க. வாங்கிய வாக்குகளை விட இது அதிகம் ஆகும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு   வாங்கிய அதே அளவிலான வாக்குகளை, இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெறும் 7 இடங்களில் போட்டியிட்டு பா.ம.க. பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு  எவ்வகையிலும் இழப்பையோ, பாதிப்பையோ ஏற்படுத்த வில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. ஒரு தேர்தலில் வெற்றியடைந்த கட்சி, அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததையும், அந்த தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சி அதற்கு அடுத்த தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெற்றி பெற்றதையும் பார்த்திருக்கிறோம். தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை கூற முடியும்.

‘விழுவதல்ல தோல்வி. வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி’’ என்பது நம்பிக்கை மொழி. எவ்வளவு வேகமாக விழுந்தாலும், விழுந்த வேகத்தில் எழுந்து ஓடி வெற்றிக்கோட்டைக் கடப்பது பாட்டாளிகளின், குறிப்பாக பாட்டாளி இளைஞர்களின் இரத்தத்தில் ஊறிக் கிடக்கும் வழக்கமாகும். இதற்கு கடந்த காலங்களில் ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும். பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று பாட்டாளி இளைஞர்கள் தீர்மானித்து விட்டால், அடுத்த மாதமே தேர்தல் வந்தாலும் அதில் எதிரணிகளை வீழ்த்தி வெற்றிகளை குவிக்க முடியும். இது சாத்தியமானது தான்.

பாட்டாளி மக்கள் கட்சி சரிவுகளை சந்திக்கவே சந்திக்காத கட்சி அல்ல. கடந்த காலங்களில் இதைவிட மிக மோசமான தோல்விகளை பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்திருக்கிறது. சாதாரண வேகத்தில் பயணித்து சரிவுகளை சந்திக்கும் போது, உடனடியாக அதிக வேகத்தில் மீண்டும் பயணித்து இலக்குகளை எளிதாக கடக்கும் திறன் பா.ம.க.வுக்கு உண்டு. இதற்கு காரணம் பா.ம.க.வை உந்தித் தள்ளும் சக்தியாக இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள்... இளைஞர்கள்... இளைஞர்கள் என்பது தான். கடந்த காலத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அடைந்த தோல்விகளின் ஈரம் காயும் முன்பே நமது வாக்கு வலிமையை நிரூபித்துக் காட்டிய தருணங்கள் ஏராளம். இப்போதும் நமது வலிமையையும், செல்வாக்கையும் நிரூபித்துக் காட்ட இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள், இரு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் என வாய்ப்புகள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com