தமிழகத்தில் பின்னடைவைச் சந்திக்கிறதா அடையாள அரசியல்?

மக்களவைத் தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, தமிழகத்தில் அடையாள அரசியல் மிகுந்த பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் பின்னடைவைச் சந்திக்கிறதா அடையாள அரசியல்?
Updated on
2 min read


மக்களவைத் தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, தமிழகத்தில் அடையாள அரசியல் மிகுந்த பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சுமார் 30 ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் பாமக மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறது. வட மாவட்டங்களில் வலுவுடனும், கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க அளவிலும் உள்ள பாமக தென் மாவட்டங்களில் கட்சியை விரிவுபடுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
அதேநேரம், தலித் மக்களுக்கான அதிகாரத்தை மையப்படுத்தி 28 ஆண்டுகளுக்கும் மேலாக களத்தில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வட மாவட்டங்களில் மிக வலுவுடனும், கொங்கு மண்டலம், தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியையும் கொண்டுள்ளது. தலித் அடையாளத்தை முன்னிறுத்தும் மற்றொரு அரசியல் கட்சியான புதிய தமிழகம் 25 ஆண்டுகளாக தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியுடன் உள்ளது.
இந்தக் கட்சிகளைப் போலவே பிற்படுத்தப்பட்ட மக்களின் அடையாளமாக ஈஸ்வரன் தலைமையிலான  கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (கொமதேக) , பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) ஆகியவையும் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் களத்தில் உள்ளன. இவற்றில் கொமதேக கொங்கு மண்டலத்திலும், ஐஜேகே வட மாவட்டங்களிலும் தங்களது வாக்கு வங்கியைப் பலப்படுத்த போராடி வருகின்றன.
எனினும், தேர்தல் களத்தில் தனித்து அல்லது கூட்டணியில் நின்று இந்தக் கட்சிகள் அதிகபட்சமாக 5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிகிறது. பாமக மட்டும் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நின்று 5.36 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றது. பிற கட்சிகள் 3 சதவீத வாக்குகளை தாண்ட முடியவில்லை.
தற்போதைய மக்களவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட்ட பாமகவுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அந்தக் கட்சியின் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அந்தக் கட்சியின் பிற வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் (5,38,972), ஸ்ரீபெரும்புதூர் (5,07,955), மத்திய சென்னை (3,00,347), கடலூர் (1,43,983), விழுப்புரம் (1,25,432) தோல்வி அடைந்துள்ளது பாமகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தில் தனிச் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மிகுந்த சிரமத்துக்கு இடையே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் (3,219) வெற்றி பெற முடிந்தது. அதேநேரம், விழுப்புரத்தில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் துரை.ரவிக்குமார் 1,25,432 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதேபோல, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட  ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் 4,03,508 வாக்குகள் வித்தியாசத்திலும், நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் சின்னராஜ் 2,65,151 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். தென்காசி (தனி) மக்களவைத் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி 1,20,286 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தனிச் சின்னத்தில் (மாம்பழம்) போட்டியிட்ட பாமக, பலமான வாக்கு வங்கிக் கூட்டணியுடன் தேர்தலில் களமிறங்கிய போதிலும், அதிமுக, தேமுதிக கட்சிகளைச் சேர்ந்த தலித் வாக்குகள் மற்றும் பாமக பலம் பெறுவதை விரும்பாத பிற சமூக வாக்குகள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காததால்தான் அந்தக் கட்சிக்கு இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
ஆனால், தனிச் சின்னத்தில் போட்டியிட்டதால், திமுக கூட்டணிக்கு ஆதரவாக மிகப் பெரிய அலை வீசிய போதும் தொல்.திருமாவளவன் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது. தலித் வாக்குகள் திருமாவளவனுக்கு ஆதரவாக இருந்தாலும், பிற சமூக வாக்குகள் பெருமளவில் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளதை தேர்தல் முடிவு காட்டுகிறது.
திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொமதேக, ஐஜேகே வேட்பாளர்களுக்கு திமுக, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலித் வாக்குகள் விழாமல் இருந்திருந்தால், லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது.
எதிர்ப்பு அலை வீசியதால், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டும்கூட தென்காசியில் புதிய தமிழகம் சுமார் 1.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. தனிச் சின்னத்தில் நின்றிருந்தால் இதைவிட மிகப்பெரிய பின்னடைவு புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு ஏற்பட்டிருக்கக்கூடும்.
அடையாள அரசியலை முன்னிறுத்தும் கட்சிகள் தனிச் சின்னத்தில் நின்றால் கூட்டணிக் கட்சி வாக்குகள், பொது வாக்குகளைப் பெற முடியாமல் போகிறது. ஆனால், இதே கட்சிகள் முக்கிய கட்சிகளின் சின்னத்தில் நின்றால் பிற கட்சிகளுக்கு நிகரான வெற்றியைப் பெற முடிகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது, அடையாள அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் மக்களிடம் வெறுப்பை சம்பாதிக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் ரவிக்குமார் கூறியதாவது: 
அடையாள அரசியலுக்குப் பின்னடைவு இல்லை. வெறுப்பு பிரசாரம் செய்யும் கட்சிகளுக்குத்தான் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இனிமேலாவது அடையாள அரசியலை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகள் வெறுப்பு பிரசாரத்தைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com