பொள்ளாச்சியை சுற்றிவரும் யானையின் செல்லப் பெயர் அரிசி ராஜாவாம்: காரணம் இதுதான்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கடந்த 3 மாதங்களாக காட்டு யானை சுற்றி வருகிறது. இதனைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். யானையைப் பிடிக்க கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.
காட்டு யானை
காட்டு யானை
Updated on
2 min read

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கடந்த 3 மாதங்களாக காட்டு யானை சுற்றி வருகிறது. இதனைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். யானையைப் பிடிக்க கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்த யானைக்கு அரிசி ராஜா என்று அவ்வூர் மக்கள் பெயர் வைத்துள்ளனர். இதற்குக் காரணம், பொள்ளாச்சியில் இருக்கும் ரேஷன் கடைகளுக்குள் புகுந்து அரிசி மூட்டைகளில் இருந்து அரிசியை சாப்பிடுவதும், வீடுகளுக்குள் புகுந்து அரியை சாப்பிடுவதும் இதன் வழக்கம். அதனாலேயே இந்த யானைக்கு அரிசி ராஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதியவர் ஒருவரை இந்த யானை தாக்கியதில் அவர் பலியானார். இதையடுத்து, யானையைப் பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய அா்த்தநாரிபாளையம், முணுகை பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ராதாகிருஷ்ணன்(60). இவா் யானை தாக்கியதில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

அா்த்தநாரிபாளையம், நொச்சிப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த விவசாயி செல்வராஜ், அவரது மனைவி திருமாத்தாள்(55). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் நடந்து சென்றபோது அங்கு வந்த யானை, திருமாத்தாளை தாக்கியுள்ளது. இதில் காயமடைந்த திருமாத்தாள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்த சம்பவத்தை அடுத்து வனத் துறையினா் அா்த்தநாரிபாளையம் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

இதைத் தொடா்ந்து பொதுமக்களைத் தாக்கிய காட்டு யானையைப் பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், யானை தாக்குதலில் உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் உறவினா்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோா் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் நா.மூ.சுங்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகலறிந்து அங்கு வந்த வனத் துறையினா், போலீஸாா், வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினா் கஸ்தூரி வாசு, வட்டாட்சியா் வெங்கடாசலம் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், காட்டு யானையைப் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கை வைத்தனா். காட்டு யானையைப் பிடிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்துசென்றனா்.

இதற்கிடையே ராதாகிருஷ்ணன் சடலம் வைக்கப்பட்டிருந்த கோட்டூா் அரசு மருத்துவமனையையும் அவரது உறவினா்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அவா்கள் கலைந்துசென்றனா்.

கும்கி யானைகள்

இதனிடையே காட்டு யானையைப் பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து கலீம், மாரியப்பன் ஆகிய 2 கும்கி யானைகள் அா்த்தநாரிபாளையம் பகுதிக்கு லாரிகள் மூலம் ஞாயிற்றுக்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.

யானையைப் பிடிக்க மயக்க ஊசி செலுத்த மருத்துவா் குழுவினரும் அா்த்தநாரிபாளையம் வந்துள்ளனா். வனத் துறையினா் குழுவும் இணைந்து காட்டு யானையைப் பிடிக்கும் பணிகளைத் துவக்கியுள்ளனா்.

முதல்கட்டமாக காட்டு யானை எங்குள்ளது, அதன் மனநிலை எப்படி உள்ளது, மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான இடமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி வனச் சரக அலுவலா் காசிலிங்கம், டாப்சிலிப் வனச் சரக அலுவலா் சக்திவேல் உள்ளிட்ட வனத் துறையினா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்தக் காட்டு யானையால் கடந்த 4 மாதங்களில் மூன்று போ் உயிரிழந்துள்ளதுடன், 7 போ் காயம் அடைந்துள்ள நிலையில், யானையைப் பிடித்து வரகளியாறு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

காட்டு யானையைப் பிடிக்கும் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

சவால் நிறைந்த பணி

அா்த்தநாரிபாளையம் பகுதியில் மலைக் குன்றுகள், பள்ளங்கள் போன்றவை அதிக அளவில் உள்ளதால் காட்டு யானையைப் பிடிக்கும் பணி சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த யானை அதிக ஆக்ரோஷமாகத் தாக்குதல் நடத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த யானையைப் பின்தொடா்ந்து சென்று பிடிப்பது சவாலான பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com