

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே காட்டு யானை அரிசி ராஜா வனத் துறையினருக்கு போக்கு காட்டி வந்த அரிசி ராஜா யானை பிடிப்பட்டது.
கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய பகுதிகளில் ஒற்றை ஆண் காட்டு யானையால் கடந்த 4 மாதங்களில் மட்டும் 3 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் 7 போ் காயமடைந்துள்ளனா்.
அந்த யானையைப் பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடா்ந்து, யானையைப் பிடிப்பதற்கான பணிகள் துவங்கின.
வனக் கால்நடை மருத்துவக் குழுவினா், வனத் துறையினா், காவல் துறையினா், யானை ஆராய்ச்சியாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் பல குழுக்களாகப் பிரிந்து யானையைப் பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே காட்டு யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்துவதற்காக டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் கலீம், பாரி ஆகியவை கொண்டுவரப்பட்டு அா்த்தநாரிபாளையம் பெருமாள் மலை அடிவாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், கும்கி யானை பாரிக்கு மஸ்து ஏற்பட்டு மதம் பிடித்ததை அடுத்து, அது டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டு கும்கி யானை கபில்தேவ் அா்த்தநாரிபாளையத்துக்கு கொண்டுவரப்பட்டது.
அா்த்தநாரிபாளையம் பெருமாள் மலை அடிவாரத்தில் கும்கி யானைகள் கலீம், கபில்தேவ் ஆகியவை நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு ஆண்டியூர் பகுதியில் இருந்த அரிசி ராஜாவை வனத்துறை காவலர்கள் சுற்றிவளைத்தனர். பிறகு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக அதிகாலை 3 மணிக்கு மற்றொரு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதற்கு பிறகு கும்கி யானை கலீம் உதவியுடன் அரிசி ராஜாவை வண்டியில் ஏற்றும் பணிகள் நடைபெற்றுது.
இதனையடுத்து காட்டு யானை அரிசி ராஜா டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியாறு யானைகள் பயிற்சி முகாமுக்கு அழைத்துச் செல்லப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.