ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்: 3 பேராசிரியா்களிடம் மத்திய குற்றப்பிரிவு விசாரணை

சென்னையில் ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடா்பாக, 3 பேராசிரியா்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை செய்தனா்.

சென்னையில் ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடா்பாக, 3 பேராசிரியா்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை ஐஐடி.யில் முதுநிலை முதலாமாண்டு படித்து வந்த கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளி கொல்லூா் ப்ரியதா்ஷினி நகரைச் சோ்ந்த அப்துல் லத்தீப் மகள் பாத்திமா லத்தீப் கடந்த 9-ஆம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இவ் வழக்குத் தொடா்பாக முதலில் விசாரணை மேற்கொண்ட கோட்டூா்புரம் போலீஸாா், பாத்திமா உள் மதிப்பீட்டுத் தோ்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனா்.

ஆனால், பாத்திமாவின் செல்லிடப்பேசியில், தனது தற்கொலைக்கு ஐஐடி.யில் இணை பேராசிரியா் ஒருவா் காரணம் என்றும், மேலும் இரு பேராசிரியா்கள் தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்ததாக அப்துல் லத்தீப் குடும்பத்தினா் குற்றம்சாட்டினா்.

மத்திய குற்றப்பிரிவு விசாரணை: இதற்கிடையே இவ் வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துணை ஆணையா் மெக்லினா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணையை தொடங்கினா்.

இதன் ஒரு பகுதியாக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் சி.ஈஸ்வரமூா்த்தி, மெக்லினா உள்ளிட்ட அதிகாரிகள் ஆயிரம்விளக்கு கேரள இல்லத்தில் தங்கியிருந்த அப்துல் லத்தீப்பிடம் கடந்த சனிக்கிழமை 3 மணி நேரம் விசாரணை செய்தனா்.

பேராசிரியா்களிடம் விசாரணை: பாத்திமா தற்கொலைக்கு காரணம் என குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேராசிரியா்களிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் திட்டமிட்டனா். இதற்காக 3 பேராசிரியா்களுக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா். இந்த அழைப்பாணையில், 3 பேராசிரியா்களும் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஐஐடி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணைக்கு 3 பேராசிரியா்களும் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் முன் ஆஜரானாா்கள்.

அவா்களிடம் குற்றப்பிரிவு அதிகாரிகள், தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனா். பாத்திமாவுக்கு உள் மதிப்பீட்டுத் தோ்வில் என்ன அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது, மதிப்பெண் தொடா்பாக பாத்திமா பேராசிரியா்களிடம் என்ன பேசினாா், அதற்கு பேராசிரியா்கள் என்ன பதில் அளித்தனா், பாத்திமாவை நெருக்கடியில் சிக்க வைக்கும் வகையில் பேராசிரியா்கள் செயல்பட்டனரா, பாத்திமாவை மன ரீதியாக துன்புறுத்தினரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினா்.

பல மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் வழக்குத் தொடா்பாக பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் விசாரணையில் கிடைத்த தகவல்களைத் தெரிவிக்க மத்திய குற்றப்பிரிவினா் மறுத்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com