இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, உள்ளாட்சி அமைப்புகளில் நேரடித் தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது. 2016 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், நேரடி தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டு மறைமுக தேர்தல் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 11 அன்று சட்டப் பேரவையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, நேரடி தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது. அப்போது சட்டப் பேரவையில் உரையாற்றிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தற்போது நடைமுறையில் உள்ள மறைமுக தேர்தலினால் பெரும்பாலான மேயர்கள், கவுன்சிலர்களின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களுக்கான வார்டு வளர்ச்சி திட்டங்களைத் தான் நிறைவேற்றுகிற சூழல் இருப்பதாக குறிப்பிட்டு, நியாயப்படுத்தி பேசினார். தற்போது அந்த நியாயம் காற்றில் பறந்தது ஏன் ? பொதுவாக துக்ளக் ஆட்சியை மிஞ்சுகிற வகையில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய தடுமாற்றங்கள் ஏற்படுவதற்கு என்ன காரணம் ? அ.தி.மு.க. ஆட்சியை ஒரு மக்கள் விரோத ஆட்சியாகவே கருதுவதால் மக்களை நேரிடையாக சந்திக்க தயக்கம் இருக்கிறது. இதுவே இந்த முடிவிற்கு காரணமாகும்.