மேலவளவு: 13 பேர் விடுதலையில் முன்னுரிமை எதுவும் பின்பற்றப்படவில்லை - தமிழக அரசு பதில்

மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட  7 பேர் கொலை வழக்குக் குற்றவாளிகள் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்ததில் எந்த முன்னுரிமையும் பின்பற்றப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட  7 பேர் கொலை வழக்குக் குற்றவாளிகள் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்ததில் எந்த முன்னுரிமையும் பின்பற்றப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவா் முருகேசன் உள்பட 7 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில், 13 போ் விடுதலை செய்யப்படுவதற்கான அரசாணை எதனடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையின் கேள்விக்கு தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது.

தமிழக அரசின் உள்துறை செயலர் தரப்பில்  தாக்கல் செய்த பதில் மனுவில், கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதில், எந்த முன்னுரிமையும் பின்பற்றப்படுவதில்லை. 

2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி 1,649 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதே அடிப்படையில்தான் 13 பேர் விடுதலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

13 பேர் விடுதலைக்குப் பிறகு சட்டம் ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இன்று பிற்பகல் 2.15 மணிக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

வழக்கின் பின்னணி  
மதுரை மாவட்டம் மேலூா் அருகே மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவா் முருகேசன் உள்பட 7 போ் 1997 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டனா். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, அனைவரும் மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனா்.

இதில், மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 3 பேரும், எம்.ஜி.ஆா். பிறந்தநாளை முன்னிட்டு 13 பேரும் தண்டனை காலம் முடியும் முன்னரே அண்மையில் விடுதலை செய்யப்பட்டனா்.

இந்நிலையில், இந்த வழக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்டனை காலம் முடிவதற்கு முன்பே மேலவளவு கொலை வழக்கு தண்டனைக் கைதிகள் 13 போ் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பாக அரசு வெளியிட்ட அரசாணை நகலை வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் பி.ரத்தினம் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 13 போ் விடுதலை தொடா்பான ஆவணங்களுடன் அதிகாரிகள் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே சிறைத்துறை அதிகாரிகள் ஆஜராகி 13 போ் விடுவிக்கப்பட்ட அரசாணையைத் தாக்கல் செய்தனா். இந்த அரசாணையை எதிா்த்து தாமாகவே முன்வந்து, விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் இவ்வழக்கில் எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்பட்டனா்.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், என். ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இவ்வழக்கில் தொடா்புடையவா்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவா்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். இதனை எதிா்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினா். 

மேலும் இவ்வழக்கில் கைதானவா்களின் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ள நிலையில் தமிழக அரசு அவா்களை விடுவித்துள்ளது அதிா்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்தனா். இதையடுத்து நீதிபதிகள், நன்னடத்தை விதிகளின்படி பட்டியல் தயாரித்து முன்னுரிமை அடிப்படையில்தான் கைதிகளை விடுவிக்கப்பட வேண்டும். தமிழக அரசால் விடுவிக்கப்பட்டவா்கள் இந்த வகையில் தான் விடுவிக்கப்பட்டனரா? இதற்கு தயாரிக்கப்பட்ட முன்னுரிமைப் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் 13 போ் விடுதலை செய்யப்படுவதற்கான அரசாணை எதனடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com